பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

இன்று நாம் மக்களாட்சி நடைபெறும் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சாமானியனும் சாதனை படைக்கும் காலம் இது! சுதந்திரம் பெற்ற பின்னர் நவயுக பாரதம் எத்தகைய வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எந்த அடிப்படையில் நமக்கு இந்த வாழ்வு கிடைத்துள்ளது என்பதைச்சற்றே திரும்பிப் பார்த்தால், நாம் இனித் தொடரவேண்டிய பாதையும் செய்துமுடிக்கவேண்டிய சாதனைகளும் நம்முன் தோன்றலாம். இதற்கு வழிகாட்டியாக நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பதிவுகளை உற்று நோக்கிக் கற்றறிய வேண்டும். இதற்குத் துணைபுரியும் வகையில் டாக்டர். நெ.து.சுந்தரவடிவேலு.அவர்களின் நினைவு அலைகள் என்னும் சுயசரிதை அமையும் என எண்ணி இந்நூலை மறுபதிப்பாகக் கொண்டு வரத் திட்டமிட்டோம்.

சுந்தர வடிவேலு அவர்கள், பள்ளியே இல்லாத ஒரு சிற்றுாரில், விவசாயத்தைத் தொழிலாகக்கொண்ட குடும்பத்தில் பிறந்து, தந்தையாரின் வழிகாட்டுதலுடன் (சென்னைப்) பட்டினம் சென்று கல்லூரியில் கால் பதித்தார். அக்காலத்தில் கல்வியைக் கற்பதில் இருந்த சிரமங்கள் இன்றைக்கு இருப்பவர்களுக்குத் தெரியாது! தெரிய வாய்ப்பும் இல்லை. கற்றவர்கள் பெரும்பாலோர் பட்டங்களையும் பதவிகளையும் பெற்று ஆங்கில அரசுக்கு ஆலவட்டம் சுழற்றி வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த காலம் அது! அக்காலத்தில் கல்வி கற்ற டாக்டர் நெ.து. சு. அவர்கள் தம் வாழ்க்கையை எப்படித் தொடங்கினார், தாம் வாழ்ந்த சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் எவ்வெவ்வாறெல்லாம் பணியாற்றினார் என்பதனை இந்த நூலில் தெளிவாகக் கூறியுள்ளார்.

கல்வி கற்ற காளைப் பருவத்திலேயே நெ.து.சு. அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்; அதில் காந்தியடிகளின் நெறியைப் பின்பற்றி நடக்க விருப்பம் கொண்டவர்; பிற்காலத்தில் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி நடத்தி, தமிழ் சமுதாயத்திற்குச் 'சமூகநீதி'யைப் பெற்றுத்தரப் போராடிய தந்தை பெரியாரின் பாதையில் நடந்து சமுதாய விழிப்புணர்வுக்குப் பாடுபடவேண்டும் என்கிற எண்ணத்தை வளர்த்துக் கொண்டவர்.

கல்லூரிக் கல்வியை முடித்த காலத்திலேயே சமூக முன்னேற்றச் சிந்தனைகளில் ஈடுபாடுகொண்ட நெ.து. சு. 'தமிழ்நாடு' நாளிதழில் பணியாற்றத் தொடங்கி, பத்திரிகை ஆசிரியராகப் பெற்ற அனுபவம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/6&oldid=1204958" இலிருந்து மீள்விக்கப்பட்டது