பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 21 ஊர் நீளமாக அமைந்திருந்தது. நீண்ட ஆற்றோரமெல்லாம் பனைமரங்கள் அடர்ந்து இருந்தன: காய்த்து, நுங்கை வழங்கின. பதனர் இறக்குவது அவ்வளவாகப் பழக்கமில்லை. ஆனால் கள் இறக்குவது ஊரில் இலுப்பை மரங்கள், அரசமரங்கள், ஆலமரங்கள், நாவல் மரங்கள் இருந்தன. ஊப்பாத்திப் புதர்கள் நிறைய இருந்தன. அதன் பழங்கள் ஏழைகளுக்கு விருந்து, நாங்கள் மட்டும் அதை உண்ணக்கூடாது என்பார்கள். ஏனோ தெரியாது. மரங்கள் அடர்ந்து செழித்து இருந்ததால், அடுத்த கரையில் இருக்கும் இளையனார் வேலூரின் வீடுகள் எல்லாம் கண்ணில் படுவது அருமை. இயற்கை வளம் பல்லாண்டு காப்பாற்றப்பட்டது. சென்ற சில ஆண்டுகளாக அந்த வளம் பட்டுப் போய்க் கொண்டு இருக்கிறது. சமுதாயத்தில் எத்தனையோ நலிவுகளைக் கண்டு, மாற்றேதும் செய்ய முடியாது புழுங்குவதைப்போல, நாடு தழுவிய இக் கெடுதியைக் கண்டு கண்ணிர்த் துளிகளைச் சிந்த மட்டுமே முடிகிறது. மரம் வளர்ப்பதைப் பற்றிப் பதவியிலிருந்தபோதே சொல்லிச் சொல்லித் தோற்றுவிட்டேன். எங்கள் ஊருக்கு ஏரி ஒன்று உண்டு. செய்யாற்றிலிருந்து வரும் வாய்க்கால் ஒன்று அதை நிரப்பும். மழைக் காலமாகிய அக்டோபர் நவம்பர் மாதங்களில் செய்யாற்றில் வெள்ளம் ஒடும். சில நாள்கள் முழு ஆறும் நிறைந்து நுங்கும் நுரையுமாக ஓடுவதுண்டு. மழைக்கால வெள்ளம் தொடங்கியதும் ஊரிலிருந்து நாற்பது ஆள்கள் சென்று, ஆங்காங்கே, தூர்ந்துள்ள ஆற்றங்காலை, தலைமடை யிலிருந்து வெட்டிச் செப்பனிடுவார்கள். இது நான்கு ஐந்து நாள் வேலை. இக் குடி மராமத்து வேலைக்கு நிலமுடைய அனைவரும் ஆள் அனுப்ப வேண்டும். நாற்பது ஆள்களை, நிலப் பரப்பிற்கு ஏற்பப் பிரித்து விடுவார்கள். ஒவ்வொருவர் பங்கிற்கான ஆள்களை அனுப்புவதில் சுணக்கம் இராது. மூன்று நான்கு நாள்களில் ஏரி நிரம்பிவிடும். நிரம்பிய ஏரி ஒரு போகப் பாய்ச்சலுக்குப் போதும். இரண்டாம் போகத்திற்குக்கூட முப்பது நாள்களுக்குத் தாராளமாகப் பாயும். மற்ற நாள்கள் கிணற்றில் இருந்து இறைப்பார்கள். அக்காலத்தில் 'ாடுகட்டி, கவலையால் இறைப்பார்கள். சில வேளை ஏற்ற இறைப்பும் உண்டு. இப்படிப் பெரும்பாலான நிலத்தில் இருபோகப் பயிர் உண்டு. எங்கள் தெருவில் எல்லா வீடுகளிலும் கறவை மாடுகள் இருந்தன. அத்தனையும் நாட்டுப் பசுக்கள் அல்லது நாட்டு எருமைகள். அவை குறைவாகப் பால் கொடுக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/63&oldid=787595" இலிருந்து மீள்விக்கப்பட்டது