பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நினைவு அலைகள் ஆனாலும் ஐம்பது ஆண்டுகள் முன்வரை எங்கள் உறவினர் வீடுகளில் அன்றாடச் செலவிற்குப் பாலோ, தயிரோ, மோரோ, நெய்யோ விலைக்கு வாங்கியதாக நினைவில்லை. தாராளமாக நெய் கிடைத்ததால், நெய்யாடு பாக்கம் என்னும் பெயர் பொருத்தமே என்று சொல்லிக் கொள்ளுவோம். தன்நிறைவு பெற்ற நெய்யாடிவாக்கம் நெய்யாடி வாக்கத்தின் தேவை முழுமைக்கும் எள்ளும் வேர்க்கடலையும் உள்ளூரில் விளைந்தன. அவற்றை உள்ளூர் செக்கிலோ, அடுத்துள்ள காவாந்தண்டலம், இளையனார் வேலூர், வயலக்காவூர் ஆகிய ஊர்களில் ஆடிய செக்குகளிலோ எண்ணெய் ஆக்கிக் கொள்வார்கள். வீட்டுக்கு எண்ணெயும் மாட்டுக்குப் புண்ணாக்கும் எளிதில் கிடைத்தன. மாடுகள் குடம் நிறையக் கறக்காவிட்டாலும், பெரும் செம்பு நிறையக் கறந்தன. பால்வளம் இருந்த ஊரிலே மக்கள் வளம் இருந்தது இயற்கை. உரிய பருவத்தில் வீட்டுக்கு வீடு காய்கறித் தோட்டம் செழித்திருக்கும். 'ஆடிப்பட்டம் தேடிவிதை' என்பது பழமொழி. அதை, நாட்டுப் புறங்கள் பெரும்பாலும் பின்பற்றின. ஏரி நிறைந்தன்ன செல்வராயினும், எத்தனை ஊர்ப்பெரிய தனங்களாய் இருப்பினும் ஆடி மாதம் ஊருக்குத் திரும்பிவந்து வீட்டுத் தோட்டத்தில், புடலம், பீர்க்கை, வெண்டை, பாகல், அவரை ஆகிய விதைகளை ஊன்றுவதைக் கடமையாகக் கொண்டிருந்தார்கள் அக்காலத்து மக்கள். அதில் தவறுவது பழிப்பிற்கு உரியதாகக் கருதப்பட்டது. வீடு உடையவர்கள் புறக்கடையில் தோட்டம் போட்டு, மூன்று நான்கு திங்களுக்குச் சந்தைக்குச் செல்லாமல், பசுமையாகவே சத்துள்ள காய்கறிகளை உண்டு வாழ்ந்தால், மற்றவர்கள் என்ன செய்வார்கள்? வாய்க்கால் கரைகளில், மூலைமுடுக்குகளில், சின்னஞ்சிறு மண்குடிசைகளில் வாழ்ந்தோரும் காய்கறி உற்பத்திக்குத் தங்கள் எளிய பங்கை ஆற்றினார்கள். தங்கள் குடிசைகளின் பக்கத்தில் சாண் சதுர நிலத்திலாயினும் அதில் குழி தோண்டி, சுரை, பரங்கி, பூசணி விதைகளைப் புதைத்து வளர்த்து வந்தார்கள். அவை முளைத்து கொடியாகப் படரும்போது. அவற்றைக் குடிசைகளின்மேல் ஏற்றி விட்டார்கள். அவை படர்ந்து, பூத்து, காய்த்தன. குடிசைகளின் மேலும் காய்த்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/64&oldid=787607" இலிருந்து மீள்விக்கப்பட்டது