பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/650

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 6O7 பல ஊர்களுக்குப் பள்ளியைத் தொடங்கும் நேரத்திற்கு முன்பே போய்ச் சேருவேன். பிள்ளைகள் வருவதற்கு முன்பு, பதிவேடுகளைத் தணிக்கை செய்வேன். அவை பற்றிய குறிப்புகளை எழுதுவேன். பிள்ளைகள் வந்ததும் பாடங்களில் தேர்வு நடத்துவேன். எந்தெந்த வகுப்புகளில் எவ்வெப் பாடங்களில் நல்ல தேர்ச்சி, எவற்றில் சுமாரான தேர்ச்சி, எவற்றில் மோசமான நிலை, என்று விவரமாக எழுதவேண்டும். அதை முடித்துவிட்டு, நடையும் ஒட்டமுமாக அடுத்த ஊர் பள்ளியைப் பார்வை இடவோ, தணிக்கை செய்யவோ செல்வேன். அவ்வூரில் தணிக்கையானால் பள்ளி கலைவதற்கு முன்பு, மானாக்கர் தேர்ச்சியினை மதிப்பிட்டு அவர்களை வீட்டுக்கு அனுப்புவேன். பிறகு, பதிவு ஏடுகளைத் தணிக்கை செய்து குறிப்புகளை எழுதுவேன். பள்ளித் தணிக்கையும் பார்வையும் எனக்கு முழுமையாகப் புதியன அல்ல. ஒரளவு அவற்றில் பழகி இருந்தேன். எப்படி? துணைப் பஞ்சாயத்து அலுவலராக இருந்தபோது ஊராட்சித் தொடக்கப் பள்ளிகளையும், மாவட்டக் குழுவின் தொடக்கப் பள்ளிகளையும் பார்வையிடுவது என் கடமைகளில் ஒன்றாக இருந்தது. அப்பணியைச் செம்மையாக ஆற்றும் பொருட்டு முன்னோர் எழுதிய பார்வைக் குறிப்புகளைப் புரட்டிப் பார்த்தேன். ஒரளவு ஆழமாகக் கற்றேன். பார்வையின்போது எவ்வெவற்றைக் கவனிக்க வேண்டும்? இருக்கவேண்டிய ஆசிரிய ஆசிரியைகள் பணியில் இருந்தார்களா? மாணவர் வருகைப் பட்டியில் வந்ததாகக் குறிக்கப்பட்டவர்கள், பார்வையின்போது பள்ளியில் இருந்தார்களா? வந்ததாகக் குறிக்கப்பட்டவர்களைவிட இருப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பின், காரணம் என்ன? - கால அட்டவணைப்படி பாடங்கள் நடந்து கொண்டிருந்தனவா? பள்ளிக்கூடம் துப்புரவாக இருந்ததா? மேற்கூறியவற்றைப் பார்த்து, குறிப்பு எழுதவேண்டும். ஆண்டுத் தணிக்கையின்போது, இவற்றோடு நிற்கக்கூடாது. ஆண்டின் பாடங்கள் ஒழுங்காக நடந்தனவா? அவற்றைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் அதற்கான பாடக் குறிப்புகளைச் செம்மையாக அவ்வப்போது ஆயத்தஞ் செய்தாரா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/650&oldid=787619" இலிருந்து மீள்விக்கப்பட்டது