பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/651

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GDB நினைவு அலைகள் பாடம் சொல்லியதன் பலன் என்ன? கட்டுரைகள் ஒழுங்காக எழுதப்பட்டனவா? திருத்தப்பட்டனவா? மொத்த முயற்சியின் விளைவாக, மாணாக்கர் அடைந்துள்ள உண்மையான தேர்ச்சி நிலை எவ்வளவு? இவற்றையெல்லாம் மதிப்பிட்டுப் பூர்த்திசெய்ய, நீண்ட நான்கு பக்க படிவம் ஒன்று உண்டு. அதைப் பூர்த்தி செய்துகொண்டு வருவதோடு, பள்ளியில் உள்ள தணிக்கைக் குறிப்பு நூலில் விரிவாக எழுதிவிட்டு வர வேண்டும். பிறகு, தணிக்கை அறிக்கைக்குத் தெளிவான படியெடுத்து மாவட்டக் கல்வி அலுவலருக்குத் திங்களுக்கு ஒருமுறை அனுப்பி வைக்கவேண்டும். தணிக்கை அறிக்கை எழுதும் முறை பற்றி, துணைப் பஞ்சாயத்து அலுவலராக இருந்த தொடக்கத்தில் நான் நாட்டம் செலுத்தவில்லை. ஆனால் இளந்துணை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பித்த பிறகு அதில் கவனம் செலுத்தினேன். பல ஆய்வாளர்களின் அறிக்கைகளைப் படித்துத் தெரிந்துகொண்டே ஆய்வாளராகச் சேர்ந்தேன். அந்த முன் ஆயத்தம் தணிக்கை வேலைச் சிக்கலைப் போக்கிற்று. பள்ளிகளின் அன்றைய நிலைமை ஆனால், அன்றைய சமுதாயச் சூழல், மக்கள் மனப்போக்கு, முதலியன வேதனையூட்டின. இன்றைக்கே ஆசிரியர்கள் பள்ளி ஊரில் குடியிருப்பது அருமை: அன்றைக்கோ, கேட்க வேண்டாம். உள்ளுர்க் குடியிருப்பு வியப்பிற்கு உரியது. எனவே பார்வையின்போது எல்லோரும் இருப்பது புதுமை. பார்வைக்குப்பின் வருவோர், பார்வை நேரம் காலைப்போதாயின் அரைவேளை விடுப்பும் மாலைப்போதாயின் முழுநேர விடுப்பும் எடுத்துச் சமாளிப்பர். அந்த நாளில் சிற்றுார்களில் அஞ்சல் கிடைப்பது அன்றாடம் அல்ல; வாரத்திற்கு ஒரிரு முறைகள். இதுவும் அவர்களுக்குத் துணையாகும். முன் தேதியிட்டு எழுத உதவிற்று. பிள்ளைகள் வருகை எப்படி? பட்டியல் படி இருக்க வேண்டியவர்கள் இருக்கமாட்டார்கள். பலர் குறைவாக இருக்கக் காண்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/651&oldid=787620" இலிருந்து மீள்விக்கப்பட்டது