பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/653

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 O நினைவு அலைகள் உள்ளாட்சித்துறை, நகர் மன்றம் ஆகியவற்றில் வேலைசெய்து எட்டாவதோடு பயிற்சி பெற்ற தொடக்கநிலை ஆசிரியர்களுக்குத் திங்கள் ஊதியம் ரூபாய் பதினைந்தில் தொடங்கும். அத்தகையோருக்கு ஊராட்சிப் பள்ளியில்தான் வேலை கிடைத்தது என்றால் அவருடைய ஊதியம் ரூபாய் பன்னிரண்டேதான்! தனியார் பள்ளியின் தொடக்க நிலை ஆசிரியர் ஊதியம், எவ்வளவு? பன்னிரண்டு ரூபாய்கள். அச்சிறு ஊதியம் எப்போது வரும் ஊராட்சிப்பள்ளி ஆசிரியர்களுக்கும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறையே நிதி உதவி வரும்; பெரும்பாலான ஆசிரியர்கள் அப்போதுதான் சம்பளம் பெறுவார்கள். வட்ட, மாவட்ட ஆட்சிக் குழுவின் பள்ளிகளில் வேலை செய்தவர்களின் சம்பளம் எப்போது கிடைக்கும்? பலவேளை சில இடங்களில் திங்கள்தோறும். பல இடங்களில் நிதி வந்து சேரும்போதே. பல திங்கள் ஊதியத்தைச் சேர்த்துக் கொடுத்தபோது, அதில் ஒரு பங்கை வட்ட ஆட்சித் தலைவர் பிடித்துக் கொண்ட கொடுமைகளும் உண்டு. வட்ட நிலையில், உள்ளாட்சித் தலைவர் சிலவேளை தடியடிக்காரராக இருப்பார். அவரை எதிர்த்துப் போராடத் திராணியில்லாத தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆற்றாது அழுதார்கள். அது வட்டக்குழுக்களை (தாலுக்கா போர்டுகளை) அழித்தது. கல்விச் செல்வத்தை அழித்தது. தாலுக்காவாரியத் தலைவர்களில் பலர் இப்படிச்சுரண்டியதும், பலர் பெண் ஆசிரியைகளிடம் தகாத முறையில் நடக்க முயன்றதும் மாநிலம் முழுதும் அவப்பெயரை ஏற்படுத்தின. அப்போதைய அரசு தாலுக்கா வாரியங்களை ஒழிக்கச் சட்டம் செய்தது. கொடுமையால், ஆதிக்கத்தால் கல்விப் பயிர் கருகிப்போய்க் கொண்டிருந்த காலத்தில் நான் கல்வித் துறைப்பணிக்கு வந்தேன். அவை மெல்ல மெல்லத் தேய்ந்த வரலாறு பின்னர் வரும். பயிர்கள் அதிகப்படி நீரால் சாவியாவது உண்டு. இன்றைய கல்விப் பயிர் அதிகச் செல்லம் தருவதால், செல்ல நீர்ச் சாவியாகும் அவலநிலைக்கு விரைந்து போவதாகப் பலரும் குறைபடக் கேட்கிறேன். -- அது மெய்யா? பொய்யா? தொடக்கப் பள்ளிகளின் புறநிலை எப்படியிருந்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/653&oldid=787622" இலிருந்து மீள்விக்கப்பட்டது