பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/660

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 617 பயனுள்ள கைத்தொழிலைச் சேர்த்து இருந்தது ஒன்றே அங்குள்ள சிறப்பு; மற்றப்படி பிற பள்ளிகளில் கற்பிக்கும் பாடங்களே கற்பிக்கப்பட்டன. அந்தப் பள்ளியைப் பார்த்தபின் ஊர் திரும்ப வேண்டும். ஆனால் அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமை. எனவே, ஆய்வாளரிடம் உரிமை பெற்றுக் கொண்டு சென்னைக்குச் சென்றேன். அதற்காக அத்திப்பட்டு புகைவண்டி நிலையத்திற்கு நடந்து போகையில், வழியில் உப்பளங்களைக் கண்டேன். அதற்கு முன் நான் உப்பளங்களைக் கண்டதில்லை. அது எனக்குப் புதுமையான காட்சியாக இருந்தது. காந்தியார் நடத்திய உப்புப் போராட்டம் நினைவுக்கு வந்தது. வல்லவருக்குப் புல்லும் போர்க்கருவி. காந்தியாருக்கு அன்று மலிவாகக் கிடைத்த உப்புகூட போராட்ட மையமாயிற்று. நமக்கோ, தன் பெண்டு, தன் பிள்ளை எல்லாமாக இருந்ததால், கோடிக்கணக் கானவர்கள் வேடிக்கை பார்ப்பதோடு நின்று விட்டோம். இந்நினைவுகள் எழுந்தன. புகார்க் கடிதம் நான் பொன்னேரி, இளந்துணை ஆய்வாளராக இருந்தபோது மறக்க முடியாத புகார்க் கடிதம் ஒன்று எனக்கு வந்தது. அதுவும் பதிவு அஞ்சலில் வந்தது. புகார் என்ன? 'எங்கள் ஊர் ஒராசிரியர் பள்ளிக்குப் புதிய ஆசிரியர் ஒருவர் வந்திருக்கிறார். அவர் சரியாகப் பாடம் சொல்வதில்லை. இவருக்கு முந்தி இருந்தவரும் சரி, அவருக்கு முந்தியிருந்தவர்களும் சரி, பூகோள பாடத்தை எவ்வளவு சிறப்பாக நடத்தினார்கள் தெரியுமா? 'முதலில் உள்ளுர் பூகோளத்தில் தொடங்குவார்கள். அப்புறம் தாலுக்கா பூகோளத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள். அடுத்து? ஜில்லா பற்றி விரிவாகச் சொல்லுவார்கள். 'பிறகு, மாகாணம், நாடு, கண்டம், உலகம் பற்றிய பூகோளத்தைப் படிப்படியாகக் கற்பிப்பார்கள். நானும் அப்படியே படித்திருக்கிறேன். 'இப்போதுள்ள ஆசிரியர் அப்படிச் சொல்லிக் கொடுப்பதில்லை. பெல்லாரிச் சிறுவர்கள், காங்கோச் சிறுவர்கள், எஸ்கிமோ சிறுவர்கள் என்று ஏதேதோ கதைகளைச் சொல்லிக் கொண்டு காலத்தைக் கடத்துகிறார். அப்புறம் படிப்பு எப்படி வரும்? - 'நம் பிள்ளை கெட்டுவிடக் கூடாதே என்று எண்ணிப் பள்ளிக்குப் போய் ஆசிரியரைக் கண்டு கேட்டேன். அவர் எந்த விளக்கமும் சொல்ல மறுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/660&oldid=787630" இலிருந்து மீள்விக்கப்பட்டது