பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/662

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 619 அவ்வேளை என்னை அவ்வூர்ப் பள்ளியில் வந்து காணும்படி தெளிவாக எழுதினேன். அக்கடிதத்தை எழுதிய நாளுக்கும் குறிப்பிட்ட நாளுக்கும் போதிய இடைவெளி இருந்தது. திட்டமிட்டபடி, குறிப்பிட்ட பள்ளிக்குப் போய்ச் சேர்ந்தேன். பள்ளியைப் பார்வையிட்டுக் கொண்டு இருக்கையில், புகார் செய்தவர், என்னுடைய கடிதத்தோடு வந்து சேர்ந்தார். தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். பெஞ்சின்மேல் உட்காரச் சொன்னேன். முதலில் உட்கார உடன்படவில்லை. இரண்டாம் முறை கூறியபின் உட்கார்ந்தார். அப்புறம்? புதிய பாடத்திட்டம் புதிய பாடத் திட்டங்களைக் கொண்ட பதிப்பு ஆசிரியரிடம் இருந்தது. அதை வாங்கினேன். புகார் கூறி வந்தவரிடம் கொடுத்தேன். ஒரு பக்கத்தைக் காட்டி, படித்துப் பார்க்கச் சொன்னேன். படித்தார். சில வினாடிகளில் அவர் கண்கள் வியப்பைக் காட்டின. பூகோள பாடத்திட்டத்தை முழுமையாகப்படித்தார். பிறகு முன்பக்கத்திற்கு வந்தார். பொதுக்கல்வி இயக்குநர் ஒப்புதல் பெற்ற பாடத்திட்டம் என்று தெளிவாக அச்சடிக்கப்பட்டிருந்தது. அதைப் படித்து முடித்ததும். 'வாத்தியார் அய்யா, அன்றைக்கே, இதைக் காட்டியிருந்தால், உங்களுக்கு வீணாகப் புகார் எழுதியிருக்க மாட்டேன். இத்தனை நாள் பொருமலுக்கும் இடம் இருந்திராது. 'யாரோ பெரிய அதிகாரிகள், மற்றவர்கள் வீட்டுப் பிள்ளைகளை வைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள் என்பது இப்போதுதான் விளங்கிற்று. தெரியாமல் ஆசிரியர் மேல் பழி சொல்லிவிட்டேன். பழியோரிடம் பாவம் ஒரிடம் என்பது மெய்யாகிவிட்டது. 'தங்களுக்கு இத்தொல்லை கொடுத்ததற்கு மன்னித்து விடுங்கள். வாத்தியார் அய்யாவும் இதை மறந்துவிடும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்' என்றார். 'நல்லதுங்க! குழந்தைகளுக்குப் பிற குழந்தைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவே விருப்பம் எழும். ஆகவே, முதலில், பன்னாட்டுக் குழந்தைகளைப் பற்றிக் கதை வடிவில் சொன்னால், அந்நாடுகளைப் பற்றி ஆர்வம் பிறக்கும். 'பிறகு பூகோள பாடம் விரிவது கவர்ச்சியாக இருக்குமென்று எண்ணி, இப்படிப் பாடத்திட்டம் தீட்டியுள்ளார்கள்' என்று விளக்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/662&oldid=787632" இலிருந்து மீள்விக்கப்பட்டது