பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/669

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 நினைவு அலைகள் அநீதிகளையும் ஏற்றுக் கொண்டால்தான், அரசு ஊழியத்தில் இருக்க முடியும் என்ற அரிச்சுவடியையும் அன்று கற்க நேரிட்டது. நெடுங்காலம் காலியாக இருந்த ஒர் இடத்தில் சேர்ந்த ஒருவரை இரண்டு திங்களுக்குள் வேறு இடத்திற்கு மாற்றுவது ஊழியருக்குத் தொல்லை; பணித் தொடர்பிற்குக் கேடு; தேவையற்ற பயணப்படிகளாகப் பொதுப்பணம் பாழ். மேலும், இன்று இங்கு இருப்போர், நாளை எங்கிருப்பாரோ என்னும் விபரீதச் சுழலில், எந்த ஆய்வாளர் எந்த ஆசிரியரை வேலை வாங்க முடியும் ஒடுகாலுக்கு வேலை வாங்க வேண்டுமென்ற முனைப்புதான் முளைக்குமா? அரசு ஊழியருக்கு அநீதி தன்னாட்சி இந்தியாவின் அரசு ஊழியம் பயனற்ற ஊழியமாக மாறிவிட்டு இருப்பது எதனால்? எப்பணியில், எவ்வளவு காலம் விட்டு வைப்பார்கள் என்னும் உறுதி இன்மை முதற்காரணம். அரசு ஊழியர்களை, பொம்மலாட்டப் பொம்மைகளாக மாற்றுவதில், அடுத்து அடுத்து வரும் ஆட்சிகளுக்குள் தலை தெறிக்கும் போட்டி ஊமைக் குடிமக்கள் நிறைந்த நாட்டில் அப்போட்டியில், இமாலய வெற்றிகளைக் குவித்தல். அமைப்புகளுக்கு அப்பாற்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக் கனல், சான்றோர்களைக் கூடச் சுட்டுப் பொசுக்க வழி செய்துவிட்டு, காலந்தள்ளும் ஆட்சியாளர்கள் கொடிகட்டிப் பறத்தல். இவையும் பிறவும் உச்சமட்ட அலுவலர்களைக்கூட, மாட்டு வண்டியின் முன்பளு, பின்பளுவாக இருக்கும் உளநிலைக்குப் பக்குவப்படுத்திவிட்டன. இந்நோய் புதியதல்ல; பழையது. வெள்ளைக்காரன் ஆட்சியின் போது தீய்ந்த அருகம்புல்லாக இருந்தது; தன் ஆட்சித் தாயகத்தில் நன்கு வேர்விட்டுத் தழைத்து நிற்கிறது. மாறுதல் ஆணையை நான் படித்து முடித்ததும் அதைக் கொண்டு வந்தவர், மேற்கொண்டு செய்தி சொன்னார். புதிய அய்யா, மாலை வண்டிக்குப் பொன்னேரி வந்து சேர்ந்துவிட்டார். அவரே மாறுதல் ஆணையைக் கையில் கொண்டு வந்து கொடுத்தார். அவர் இன்றே பணியில் சேர்ந்தாக வேண்டும். வெளியே போயிருந்த பெரிய அய்யா (ஆய்வாளர்) வரத் தாமதமாயிற்று. அவர் வந்து ஆணையைப் பார்த்ததும் என்னை சைக்கிளில் உங்களிடம் அனுப்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/669&oldid=787639" இலிருந்து மீள்விக்கப்பட்டது