பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/679

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636 நினைவு அலைகள் அத்துறை அலுவலர், அதைப் பள்ளியின் ஆசிரியருக்கு அனுப்பி னார். அவருடைய விளக்கம் என்ன? 'இவ்வூர் ஆதிதிராவிடர்கள்; கல்வி பற்றிய சிந்தனையே இல்லாதவர்கள். இவர்களில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்எவரும் இல்லை. 'தற்குறித் தன்மையில் மூழ்கியிருப்பதைப் போன்றே, வறுமை யிலும் ஆழ்ந்துள்ளார்கள். அன்றாடக் கஞ்சிக்கே அல்லல்படும் இவர்கள் எத்தனை முறை சொன்னாலும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. 'ஆடு மாடு மேய்த்தால் அரை வயிறு கஞ்சியாவது கிடைக்கும் என்கிறார்கள். 'இந்நிலையில், வருகையைப் பெருக்க வாய்ப்பில்லை என்று விளக்கினார். அதை ஆதிதிராவிட நலத்துறை அப்படியே கல்வித் துறைக்கு அனுப்பிவிட்டது. அப்பள்ளியை உடனே மூடு என்று ஆணையிட வேண்டிய நிலையை எட்டியாயிற்று. தஞ்சையில் என் முதற்பணி, மூடும் பணி என்பது எனக்குக் கசப்பாயிருந்தது. மூடாமல் எப்படிச் சமாளிப்பது என்று எழுத்தரைக் கேட்டேன். 'நலத்துறையே எதிர்ப்புச் சொல்லாதபோது, நீங்கள் என்ன செய்ய முடியும்? மூடவேண்டிய பள்ளியை மூடாமல், காலம் கடத்தினால், ஆசிரியர் சம்பளம் வாங்கிக்கொண்டே இருப்பார்; நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அரசின் நிதியைப் பாழாக்கின குற்றத்திற்கு நீங்கள் பதில் சொல்ல நேரிடும் என்று எழுத்தர் எச்சரித்தார். 'பதினைந்து ரூபாய்தானே மாதச் சம்பளம் என்றேன். 'ஒரு ரூபாய் ஆனாலும் வீண் செலவுதானே. அதற்கு மேலிடத்தில் நடவடிக்கை எடுப்பார்களே!' என்று மிரட்டினார். கடைசியாக. 'பிடிக்காத ஊருக்கு எந்த ஆசிரியரையாகிலும் போட்டால், அவர் இப்படித்தான் பள்ளியை மூடிவிட வழிசெய்துவிட்டு, மாறுதல் பெற்றுக் கொள்வார்' என்று என் காதைக் கடித்து விட்டுப் போய்விட்டார் எழுத்தர். அன்றிரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. நோய்வாய்ப்பட்ட குழந்தையைக் காப்பாற்ற விழித்திருக்கும் தாயைப் போன்று விழித்திருந்தேன். என்ன செய்தால், அப்பள்ளியை மூடாமல் நடத்தும் சூழ்நிலை உருவாகும் என்பதே என் ஏக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/679&oldid=787650" இலிருந்து மீள்விக்கப்பட்டது