பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/683

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 நினைவு அலைகள் ஒவ்வொரு சிற்றுண்டிச்சாலை ஒவ்வொரு தின்பண்டத்திற்குப் பெயர் பெற்று இருப்பது உண்டு. அதுபோல, மனிதனை மனிதன் கொடுமைப்படுத்தும் கலையில் தஞ்சைத் தரணிக்கொரு தனிச்சிறப்பு உண்டு. அதையும் தெரிந்துகொள்ளுங்கள். ஆண்டையின் ஆத்திரத்திற்கு ஆளான பண்ணையாளுக்குச் சாணிப்பால் ஊற்றும் கொடுமை, முற்காலத்தில் அன்றாட நடைமுறை. அப்படி என்றால் என்ன? குற்றம் சாட்டப்பட்டவரைக் கட்டி வைப்பார்கள். சாணத்தை நீரில் கரைத்துக் கொள்வார்கள். கரைத்த சாணிக்குப் பெயர்தான்சாணிப்பால். கட்டப்பட்டவரை ஓங்கி அடிக்க, அவர் வாயைத் திறக்க, அவ்வாயில் சாணிப்பாலை ஊற்றுவார்கள். அவர் குடித்தால் ஆயிற்று. உமிழ்ந்தால், மீண்டும் அடிவிழும். இப்படிப் பொறுக்கவொண்ணா அடிகளைக் கொடுத்துச்சாணிப்பாலை விழுங்கவைக்கும் சித்திரவதை சோழவளநாட்டின் கலைகளில் ஒன்று. தமிழ்ப் பண்பாட்டின் அழுகிய பகுதி இந்து மக்களைப் பிற சமயங்களுக்குப் பிடித்துத் தள்ளிய கொடுமை. இக்காட்டுமிராண்டி நடவடிக்கை பெரும் அளவு குறைந்துவிட்டது. அடியோடு தொலைந்து விட்டதா? இல்லை. நாம் மக்கள் நிலைக்கு உயர்ந்துவிட்டோம் என்று இன்றும் சொல்ல முடியவில்லையே. இழிவையும் கொடுமையையும் நூறு தலைமுறைகளாகத் துய்த்து விட்டதால், ஆதிதிராவிடர்கள் இக்கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளப் பக்குவப்பட்டுவிட்டார்களோ என்னவோ? இவற்றை எதிர்த்துக் குரல் எழுப்பவும் திராணி அற்றுக் கிடந்தார்கள். எல்லோரும் மக்களே. எல்லோரும் அன்புக்கு உரியவர்களே. எல்லோரும் பாதுகாப்பிற்கு உரியவர்களே. எல்லோரும் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும். எல்லோரும் நல்வாழ்வு வாழ உரிமை உடையவர்கள். இத்தகைய கருத்துகள் அவர்கள் காதுகளில் வீழ்ந்தால் போதும். நவீன தானியங்கிக் கதவுகளையொப்ப அவர்கள் சிந்தனை மூடிக் கொள்ளும். அது அது அவனவன் செய்த வினை: அவன் எழுதியனுப்பியபடியே எல்லாம் நடக்கும்; அன்று எழுதியவன், இன்று அழித்துவிடவா போகிறான்? ஆறு நிறைய வெள்ளம் போனாலும் நாய் நக்கித்தானே குடிக்க வேண்டும் இப்படி இமைப்பொழுதில் கொடுமைக்கு ஆளான ஆதிதிராவிடர்களே ஆறுதல் கூறுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/683&oldid=787658" இலிருந்து மீள்விக்கப்பட்டது