பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/699

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. நம்பிக்கைத் துரோகம் ஸ்ரேயஸ் மாணவர் விடுதி நான் தஞ்சையில் பள்ளித் துணை ஆய்வாளனாக இருந்தபோது, அம்மாவட்டத்தில் உயர்நிலைப் பள்ளிகள் அதிகம் இல்லை. தஞ்சை, கும்பகோணம், மாயூரம், நாகை, பட்டுக்கோட்டை போன்ற பெருநகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள் இருந்தன. நாட்டுப்புறங்களுக்கு அவை எட்டவில்லை. அக்காலத்தில், ஆதிதிராவிட இளைஞர்களின் கல்வி அதிகம் வளரவில்லை. அவர்களுடைய உயர்நிலைக் கல்வியை வளர்க்கும் தனி முயற்சி குறைவு. இருப்பினும், தஞ்சை நகரில் மட்டும் ஒர் ஆதிதிராவிட மாணவர் விடுதி சிறப்பாக நடந்து வந்தது. அதை, தஞ்சை மாவட்ட ஆட்சிக்குழு நிர்வகித்து வந்தது. அதன் பெயர் என்ன? ஸ்ரேயஸ் விடுதி என்பது. அவ்விடுதியின் ஆண்டு விழாவில் கலந்து கொள்ளும்படி கல்வித்துறையின் கடைசிப் படிக்கட்டிலிருந்த என்னை அழைக்க வந்தார்கள். அன்றே, ஆதிதிராவிடர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைந்தேன். இன்று சென்னையில் பல அரசுப் பணிகளிலிருந்து கொண்டு 'அம்பேத்கார் திருச்சபையை நடத்தும் பழங்குடி மக்கள் என்னைப் புரவலனாகக் கொண்டு உள்ளார்கள். அன்றைய சமத்துவ உணர்ச்சி, இன்றும் என்னிடம் இயங்குவதற்கு இது அடையாளம் அல்லவா? என்னை ஆண்டுவிழாவிற்கு அழைக்க வந்த அன்பர்களிடம், இது என்ன புதுப்பெயராக உள்ளதே? என்று என் வியப்பைக் காட்டினேன். என் அறியாமையைக் கண்டு உள்ளுர நகைத்தார்களோ, இல்லையோ தெரியாது. அவர்கள் பொறுமையாகப் பதில் சொன்னார்கள். "மராட்டியர்கள் நம்மை ஆண்டதை நினைவுபடுத்துவது இம் மராட்டியப் பெயர். ஸ்ரேயஸ் என்ற மராட்டிய மன்னர் பல ஊர்களில் சத்திரங்களைக் கட்டி, அவற்றை நடத்த, சொத்தையும் எழுதி வைத்தார். "அதைக்கொண்டு, வழிப்போக்கருக்குச்சோறு போட்டு வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/699&oldid=787688" இலிருந்து மீள்விக்கப்பட்டது