பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/713

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672 நினைவு அலைகள் 'நம் சூழ்நிலையில் பிந்தியதில் முழுக்க முழுக்க எதிர்நீச்சலே அடித்தாக வேண்டும். எப்படியோ, என் பின்னாலே, அய்யா பொன்னம்பலம், லிங்கம் போல, ஆயிரக்கணக்கானவர்கள், எதற்கும் துணிந்து வருகிறார்கள். 'பதினைந்து ஆண்டு பாடு வீண் போகவில்லை. ஊர் தோறும் சாதிக் கலைப்பிற்கு சமதர்மப் பொருளியல் முறைக்கு ஆதரவாளர்கள் உருவாகிவிட்டார்கள். "அதைத் தொடர்ந்து வளர்த்துப் போராடி, தனி நாடு பெற்று, சமதர்ம அரசு ஆக்கிவிட வேண்டும். அதில் சாதிக்கு இடம்இராது. இதிலிருந்து சிறிதும் மாறக்கூடாது. நான் வெளியிலிருந்து நீதிக்கட்சித் தலைமையை விரும்பி வேண்டி ஏற்றுக்கொள்ளவில்லை. எப்படி ஆச்சு என்று அய்யாவுக்குத் தெரியுமோ? 'நம் சுயமரியாதை இயக்க வேலை தீவிரமாகிக் கொண்டிருந்தது. அப்பப் பார்த்து, எந்த மாநிலத்திலும் இல்லாததை கட்டாய இந்திப் படிப்பை - ஆச்சாரியார் திணித்தார். 'சும்மா இருந்தால், நம் பிள்ளைகள் படிப்பில் மண் விழும்: எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. எல்லோரும் என் மேலேயே அந்தப் பொறுப்பைச் சுமத்தினார்கள். 'இந்தி எதிர்ப்பில் என்னை உள்ளே தள்ளிவிட்டார்கள். அரசுக்கு எதிராகப் போராடும் எனக்குத் தலைமைப் பதவியைக் கொடுப்பது போராட்டத்தில் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நினைத்து அப்படி முடிவு செய்தார்கள். 'அய்யா பன்னிர்செல்வம் போன்றவர்கள் என்னிடம் வாதாடி அடம் பிடித்தார்கள். இந்திப் போருக்கு அவர்கள் உதவி மிகத் தேவை. அவர்களை உதறிவிட முடியுமா? வகுப்புரிமைக்குத் துணை நிற்பவர்களாயிற்றே! 'அரசால் சிறைப்படுத்தப்பட்ட நான், இப்போது நண்பர்களாலும் சிறைப்படுத்தப்பட்டதாகவே, அடிக்கடி நினைக்கிறேன். 'நீதிக்கட்சி வேலை, சிந்தனையை, நேரத்தை, உழைப்பை ஓரளவு பங்கு போட்டுக் கொள்ளும். அது தன்மான இயக்க வேலைக்கு இடையூறு ஆகும். 'அதனால் முடிந்த அளவு விரைவில் அப்பதவியை எவரிடமாவது ஒப்படைத்துவிட்டு நம் அடிப்படைப் போராட்ட வேலைக்குத் திரும்பிவிட வேண்டுமென்றே நானும் நினைத்துக் கொண்டிருக் கிறேன்' என்றார். எனக்குத் தெளிவு வந்தது. பெரியார் என்றால் அவரே பெரியார். என்னைக்கூட அய்யா போட்டுப் பேசும் அவரன்றோ பண்பாளர் என்று எண்ணிப் பூரித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/713&oldid=787711" இலிருந்து மீள்விக்கப்பட்டது