பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/716

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 675 அய்ம்பது ரூபாய்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்பது காங்கிரசு மாநாட்டு முடிவுகள். இந்தியர்களைப் பணத்தாசை கெளவாது என்று தப்புக் கணக்குப் போட்டார்கள். இந்தியா உரிமை பெற்ற பிறகு அப்படிச் செய்ய முடிந்ததா? இல்லை. விலை ஏற்றம் பிற அடிப்படைப் பொருள்களின் விலைகளையாவது கட்டுப்படுத்த முடிந்ததா? இல்லை என்பது உலகறிந்த உண்மை; வேதனையான உண்மை; கசப்பான உண்மை; விலையேற்றம் உலகளாவிய நோய் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். பலரும் சன்னி கண்டு படுத்திருக்கிறார்கள் என்பது எப்படி அந்நோயாளிக்கு ஆறுதலாகும்? மருந்தாகும்? சோவியத் நாடு போன்ற சமதர்ம நாடுகளில், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை நுகர் பொருள்களின் விலைகள் ஒரே சீராக உள்ளன. அவற்றிற்குள் போலந்து நாட்டில், அடிப்படைத் தேவைப் பொருள்களின் உற்பத்தியைப் போதி அளவு பெருக்காததால், பற்றாக்குறை ஏற்பட்டதையும், பற்றாக்குறையின் தொடர் அழுத்தம் விலைவாசிகளை உயர்த்தியதையும், அதன் விளைவாக ஊதிய உயர்வுப் போராட்டம் வெடித்ததையும் கண்டோம். இந்தியா போன்ற தனியுடைமை நாட்டில், உணவுப்பொருள்கள் போன்றவற்றின் உற்பத்தி பெருகியுள்ளது. முதல் அய்ந்தாண்டுத் திடடத்தின் தொடக்கத்தில் அய்ந்து கோடி டன் உணவு உற்பத்தி ஆயிற்று. அது இருபது கோடியாக உயர்ந்தது. மக்கள் தொகை இரண்டு பங்குபோல் உயர, உணவு உற்பத்தி அய்ந்து பங்குபோல் பெருகிய பிறகும், விலைகள் ஏறிக்கொண்டே போவானேன்? பல காரணங்கள் உண்டு. ‘சுண்டைக் காய் கால்பனம் சுமை கூலி முக்கால் பனம்' என்பது இன்றைக்கு மிகப் பொருத்தம் தன்னிறைவு பெற்ற ஊர்கள் முன்னே, அக்கம் பக்கத்திலே விளைந்த பல காய்கறிகள், இப்போது நெடுந் தொலைவிலிருந்து, வண்டிச்சத்தம் செலவு செய்து, அவைகளைக் கொண்டு வந்தால்தான் கிடைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/716&oldid=787714" இலிருந்து மீள்விக்கப்பட்டது