பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/729

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

688 நினைவு அலைகள் கவிதை பெருகிற்று. ஆண்குழந்தைத் தாலாட்டுத் தொடர்ந்து வந்தது. புரட்சிக் கவியாம் பாரதிதாசனின் சிறப்பினை, அவரது கவிதைகளின் முதல் தொகுப்பைக் குஞ்சிதம் அம்மையார் வெளியிட்ட பிறகே, பொதுமக்கள் அவரை உணரத் தலைப்பட்டார்கள். எட்டனா விலை போடப்பட்ட அந்த நூலை, குருசாமியார் எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். அதுபற்றிக்கருத்துரைவழங்குமாறு கேட்டார். பாரதிதாசன் நூலுக்கு அணிந்துரை தந்தேன் பெருக்கெடுத்து ஓடும் மலையருவியின் வேகம், மின்னலினும் விரைந்து தாக்கும் கூர்மை, உண்டதும் உயிர்ப்பிக்கும் உயிர்ப் பண்பு, பனிநீரின் தூய்மை, கொம்புத் தேனின் இனிமை, மயக்கும் மலர் மணம், தாழா நகைச்சுவை இவற்றின் இன்பச் சேர்க்கையே புரட்சிக்கவி பாரதிதாசனின் கவிதைகள். நாம் இப்பேராற்றில் மூழ்கி, அக அழுக்கை அகற்றி இவ் விச்சி நீரை (அறிவை வளர்க்கும் நீரை) உண்டு வலிமை பெற்று, இவ்வின்பத்தேன் குடித்து இன்புற்று வாழ்வோமாக! அதை அனுப்பும்போது நான் இளந்துணைப் பள்ளி ஆய்வாளனாகி விட்டேன். எனினும் அடுத்த பதிப்பில் அதைச் சேர்த்து வெளி யிட்டார்கள். வெளியிட்டவரும் செல்வர் அல்லர். கவிஞரும் அன்று. நூலுக்கான செலவை முன்பணமாகத் தந்து உதவியவர் எவர்? கீழ்மருதூர் நாராயணசாமி என்பவர். அவர் கடவுள் நம்பிக்கை உடையவர்: சைவப்பற்று மிக்கவர். அத்தகையவர், புரட்சிக் கவிதைகளை வெளியிட உதவிய பண்பு சிறந்தது; பாராட்டுக்கு உரியது. தாலியைக் கழற்றி விட்டார் குஞ்சிதம் அம்மையாரும் குருசாமியும் இரட்டையர்கள்போல வாழ்ந்தார்கள். குருசாமி பாய்ந்தோடும் மின்னாற்றல்; அம்மையோ, மின் கம்பியினைக் கட்டுப்படுத்தும் மேல்கட்டு. இருவருமே கொள்கை வேள்கள். பட்டதாரியாகும் வரை வைதீகத்தில் வளர்க்கப்பட்ட அம்மையார், பின்னர் முழு நாத்திகராகிவிட்டார். இவர்கள் திருமணம் தந்தை பெரியாரால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை முன்னரே குறித்துள்ளேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/729&oldid=787728" இலிருந்து மீள்விக்கப்பட்டது