பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/731

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690 நினைவு அலைகள் அந்நிலையில் கயவர்களில் ஒருவன், பள்ளி நிர்வாகத்திற்கு மொட்டைக் கடிதம் எழுதினான். 'திருமதி குஞ்சிதம் பெரியார் கட்சிக்காரர்; பொட்டு அணியாதவர்; தாலியைக்கூட அணியாதவர். அப்படிப்பட்டவரை அப்பள்ளியில் வைத்திருக்கலாமா என்று கேட்டான். நிர்வாகத்தினர் மெத்தப் படித்த மேதைகள். படிப்பு வேறு விவேகம் வேறு என்பதற்கு எடுத்துக்காட்டாகி விட்டனர். நடவடிக்கை எடுக்க முனைந்தனர். என்ன செய்தனர்? ஒரு நாள், திருமதி குஞ்சிதத்தைத் தலைமையாசிரியை அழைத்தார். 'ஏன் அம்மா! உங்களுக்குத் திருமணம் ஆகியிருக்கிறதா?' என்று கேட்டார். 'ஆம்! பிள்ளைகளும் உண்டு ' என்றார். 'உம் தாலியைக் காட்டு பார்க்கலாம். இது தலைமையாசிரியரின் ஆணை. நான் தாலி அணிவதில்லை ' 'ஏன் அணிவதில்லை?" 'ஆண்கள், பெண்களை அடிமைப்படுத்துவதன் அடையாளம் தாலி என்பதால், அந்த அடிமை அடையாளத்தை எடுத்து விட்டேன்.' 'ஏன் அம்மா பொட்டு வைத்துக் கொள்வது இல்லை?" 'அதுவும் சமயச் சின்னம் என்பதால் தள்ளிவிட்டேன். ' 'சரி வகுப்பிற்குச் செல்லலாம் ' என்று, எப்போதும்போல இனிமையாகச் சொல்லி, திருமதி குஞ்சிதம் குருசாமியை அனுப்பிவிட்டார். ஆனால்? அடுத்த நாள், வேலை நீக்க ஆணை வந்து சேர்ந்தது. இச் செய்தி மாணவிகளுக்கு எட்டிற்று; அவர்களுள் - பார்ப்பன சாதி யினரும் கொதிப்படைந்தார்கள்; நிர்வாகிகள் சிலரைக் கண்டு வாதாடினர். அவர்கள் இசைவு பெற்று, திருமதி குஞ்சிதம் வீடு தேடி வந்தார்கள். நடந்ததைக் கூறினார்கள்; மீண்டும் வேலைக்கு வர வேண்டினார்கள்; ஒப்புதல் தந்தால், மாற்று ஆணை பெற்று வந்து, தருவதாக மன்றாடினார்கள். அம்மை யார் ஒப்பவில்லை. மாணவிகள் ஏமாற்றத்தோடு திரும்பினார்கள். அடுத்த நாள் மீண்டும் வந்தார்கள். பழங்களும் நினைவுப் பரிசும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வணங்கிச் சென்றார்கள். இளைய தலைமுறையாவது திறமையை, நேர்மையைப் போற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/731&oldid=787731" இலிருந்து மீள்விக்கப்பட்டது