பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/738

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 697 தந்தை பெரியார், 1932 இல் சோவியத் நாட்டில் சுற்றுப் பயணம் செய்தபோதே, அங்குள்ள அனைவரும் எழுத்தறிவு பெற்றுவிட்ட நிலையைக் கண்டு மகிழ்ந்தார்; இங்கு வந்து சுட்டிக் காட்டினார். சோவியத் நாட்டைப் பின்பற்றி, மக்கள் சீனமும் முதியோர் எழுத்தறிவுக்கு முன்னுரிமை கொடுத்தது. குறுகிய காலத்தில் தன் நாட்டில் உள்ள எல்லோரையும் எழுத்தறிவு பெற்றவர்களாக வளர்த்துவிட்டது. இச்சிறப்பினை - நற்சாதனையை டாக்டர் ஜெ. சி. குமரப்பா என்ற காந்தியவாதி, தமிழர்,அய்ம்பதுகளின் பாதியில், சீனாவிற்குச் சென்று, நேரில் கண்டு வந்து நமக்குச் சொன்னார். சமதர்ம நாடுகள் மட்டுமா எழுத்தறிவில் முனைப்பைக் காட்டின? பிற நாடுகளும் காட்டின. பிரேசில் நாடு கண்ட வெற்றி பாராட்டுக்கு உரியதாகும். எழுத்தறிவு என்பது என்ன? சாதாரணக் குடிமகன் - குடிமகள் வழங்கும் சொற்களை எழுதும் ஆற்றல் பெறுதல்; அதே போன்று வீட்டுக் கணக்கெழுதும் அளவு எண் அறிவு பெறுதல். இவை எவர்க்கும் எளியன; முதியோர்க்குச் சிறியன; அவர்தம் ஆற்றலுக்கு உள்ளடங்கியன. முதியோர்க்கு அச்சொற்கள் பழையன; அவை உணர்த்தும் பொருள்கள், கருத்துகள் பழக்கமானவை. சொல்லும் கருத்தும் தெரிந்திருக்க, அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை எவை? எழுத்துகள்: அச்சொற்களை எழுதிக் காட்டும் எழுத்துகள். எனவே, முதியவர்கள், சில திங்களிலேயே அடிப்படை எழுத்தறி வைப் பெற்றுப் பயன் காணமுடியும். எழுத்தறிவின் நாற்றுகளை ஒரு திங்களிலேயே பெற்றுவிட முடியும் என்று பிரேசில் நாடு, சில ஆண்டுகளுக்கு முன்னர்தான், உலகம் அறிய மெய்ப்பித்துக் காட்டியது. எண்ணாயிரம் ஆண்டு நீரிற்கிடந்தாலும் உள்ளிரம் பற்றாத பொருள் உண்டு. நாமும் அத்தகையோரோ? ஏட்டில் திட்டம் தீட்டி, நாட்டில் வறுமையைப் பெருக்கினோம். ஏட்டில் முதியோர் கல்விக் கணக்கு எழுதி மகிழ்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/738&oldid=787738" இலிருந்து மீள்விக்கப்பட்டது