பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/740

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு Ꮾ99 சில நாள்களில், திட்டக் குழுவின் ஒப்புதல் வந்தது. பின்னர் செலவினக் குழு விற்குச் சென்றேன். அக்குழுக் கூட்டத்திலிருந்த நிதித்துறைச் செயலரும் பிறரும் எனக்குப் புதியவர்கள். அவர்கள், ஏறத்தாழ இரண்டு மணி நேரம் திட்டத்தின் கூறுகளைப் பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்தார்கள். பல கேள்விகளை எழுப்பினார்கள். அத்தனைக்கும் நானே விடை கொடுக்க நேர்ந்தது. இறுதியில் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்திட்டத்தின் சாரம் என்ன? முதல் ஆண்டில், மூன்று இந்திய மாநிலங்களில் ஒவ்வோர் மாவட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவை தீவிர சாகுபடி திட்டத்தின் கீழ்வரும் மாவட்டமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அறுபது சிற்றுார்களில், "உழவர் எழுத்தறிவு மையங்களைத் தொடங்கி நடத்த வேண்டும். மையத்திற்கு இருபது பேர்களாவது இருக்க வேண்டும். பாட காலம் ஆறு திங்கள். அக்காலத்தின் இறுதியில், முதிய மாணவர்கள் எழுத்துஅறிவு பெற்றார்களா என்று பார்க்க வேண்டும். பெற்றிருந்தால் அதற்கான சான்று இதழ் வழங்கிவிட்டு, அதே மையங்களில் புதியவர்களைச் சேர்த்து, கற்றுத் தரவேண்டும். ஒராண்டின் இறுதியில் மைய அரசு அமைக்கும் குழுவொன்று, முதியோர் எழுத்தறிவுத் திட்ட நடைமுறையை ஆய்ந்து பார்க்கும். மதிப்பீடு நிறைவாயிருந்தால், அடுத்த ஆண்டில் அத்திட்டம் முப்பது மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். அய்ந்தாண்டுகளில், நூறு மாவட்டங்களில் உழவர் எழுத்தறிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்த கேள்வி, முதலில் எந்த மூன்று மாவட்டங்களைத் தேர்ந்தெடுப்பது என்பதாகும். அப்போதைய இந்தியக் கல்வி அமைச்சகச் செயலாளர் திரு. பிரேம்கிருபாலிடம் நேரில் சென்றேன். தமிழ்நாட்டிற்கு ஒரு மாவட்டத்தை ஒதுக்கும்படி ஆலோசனை கூறினேன். அவரும் என்னிடம் நிறைய நம்பிக்கை உடையவர். எனவே, ஒப்புக் கொண்டார். * அன்றையத் தமிழ்நாட்டில், தஞ்சை மாவட்டமும் கோவை மாவட்டமும் தீவிர சாகுபடித் திட்டத்தின் கீழ்ச் செயல்பட்டு வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/740&oldid=787741" இலிருந்து மீள்விக்கப்பட்டது