பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3G நினைவு அலைகள் - நான் ஏழாம் வயதில்தான் முதன்முதல், காஞ்சிபுரத்தைப் போன்ற பெரிய நகரமொன்றைக் கண்டேன். அது பேருந்து வண்டிகள் ஓடாத காலம். அன்றைய காஞ்சி, கார்களைக் காணாத காஞ்சி. மாட்டுவண்டி, மிதிவண்டி, குதிரைவண்டி ஆகியவற்றை மட்டுமே கொண்ட காஞ்சிக்கு வந்தேன். அதுவரையில் குதிரை வண்டிகளையோ, ஈர் உருளிகளையோ நான் கண்டதில்லை. அந்தப் புதுமைகள் என்னைக் கவர்ந்தன. அவற்றிலிருந்து விடுபட்டு எப்பக்கம் திரும்பினாலும், வானுயர் கோபுரங்கள் தென்பட்டன. அகன்ற, தேரோடும் தெருக்களில் நாள் தோறும் திருவிழா ஊர்வலங்களைக் கண்டேன். முற்காலத்தில் திருவிழாக்களை ஏற்பாடு செய்த பக்தர்களிடம், முனைப்புக் குறைவாகவும் விட்டுக் கொடுக்கும் நல்லியல்பும் அதிக மாகவும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் ஒரே காலகட்டத்தில், இரு பெரும் கோயில் திருவிழா நிகழ்வதில்லை. ஒரு விழா முடிந்ததும் மற்றொரு கோயில் விழா என்ற முறையில் நடக்கும். திருவிழா ஊர்வலங்கள், வாணவேடிக்கைகள், அலங்காரங்கள், கடை கண்ணிகள் ஆகியவை என் சிறு வயதில் என்னை ஈர்த்தன. வெகுநாள், காஞ்சிபுரம் வரலாற்றுச்சிறப்புடைய, இந்தியப் பெரும் நகரங்களில் ஒன்று என்பதை அறியேன். தமிழ்நாட்டின் சிறப்பு மிக்க வரலாற்றில், பின்னர் அது வழங்கவிருக்கும் நிகழ்ச்சிகளை அன்று நான் எப்படிக் கற்பனை செய்வேன். வேத மதத்தையும், சமண சமயத்தையும், பெளத்த அறத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வளர்த்த சீலமூர் இது என்பதை நெடுநாள்களுக்குப் பின்னரே படித்தறிந்தேன். பல்லவர் தலைநகராக விளங்கிய இந்நகரம், யுவான் சுவாங் என்னும் சீனப் பயனியை ஈர்த்த தலைநகரம் என்பதையும் பிற்காலத்தில் தானறிந்தேன். 'தொன்மையும் சீலமும் செறிந்த காஞ்சி' என்பதை அறியாத பருவத்தில், அதன் புற அழகு என்னைக் கவர்ந்தது. எங்கள் நெல்லுக்காரத் தெருவின் இருமருங்கிலும் உயர்ந்து முதிர்ந்த வேப்பமரங்கள் நிழல் தந்ததோடு அழகூட்டின. இருமருங்கிலும் உள்ள பெருமரங்கள் கைநீட்டி, ஒன்றை ஒன்று கைகுலுக்குவதுபோல் காட்சியளித்தன. இத்தகைய இயற்கை இன்பங்களைப் பல்வேறு இடங்களிலும் கண்டு திளைத்ததாலோ என்னவோ, அக்காலப் பெரியவர்களாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/78&oldid=787783" இலிருந்து மீள்விக்கப்பட்டது