பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நினைவு அலைகள் நிறத்தினர். தோற்றப் பொலிவுடையவர். பாடஞ் சொல்லுவதிலும் வல்லவர். எல்லா மாணவர்களிடமும் அன்பாக நடந்து கொண்டார். திரு. அய்யங்கார் மேலண்டை இராஜ வீதியில் கச்சாலிஸ்வரர் கோயிலுக்கு அருகில் குடியிருந்தார். எல்லாப் பிரம்மோற்சவங்களின் போதும் வாண வேடிக்கைகள் உண்டு. கச்சாலிசுவரர் கோயிலுக்கு முன், உயர்ந்த பந்தலின்கீழ் சுவாமியை மண்டகப்படி செய்வார்கள். அவ்விடத்தில் வான வேடிக்கைகள் நடந்தபிறகு, மீண்டும் புறப்பாடு. ஊர்வலம் அய்யங்கார் வீட்டைத் தாண்டியே செல்லவேண்டும். விழாக் காலங்களில், அவர் வீட்டுத் திண்ணைக்கு நானும் நண்பர்களும் செல்வோம். கணக்கு அய்யாவும் எங்களோடு சேர்ந்து வாணவேடிக்கைகளைப் பார்ப்பார். சிவனுடைய ஊர்வலமாக இருந்தால், வாண வேடிக்கை முடிந்ததும் வீட்டுக்குள் போய்விடுவார். ஊர்வலம் வீட்டைத் தாண்டிய பிறகே வெளியே மெதுவாகத் தலைநீட்டுவார். வீர வைணவர், சிவன் முகத்தில் விழிக்கக் கூடாதென்னும் மரபை அவரிடமே தெரிந்துகொண்டேன். எங்களுக்குள் சைவ வைணவப் பகை கிடையாது. என்னுடைய நெருக்கமான உறவினர்களில் சிலர் சைவர்களாகவும் சிலர் வைணவர்களாகவும் இருப்பார்கள். என் தந்தையின் கொடி வழி திருநீறு பூசுவோர்; தாயின் முன்னோர்களோ நாமதாரிகள். எங்கள் உறவுக் குடும்பம் ஒன்றிற்கு, காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலில், அருகு' தீவட்டி பிடிக்கும் உரிமை உண்டு. அதாவது, மூலவருக்குப் பக்கத்தில் நின்று தீவட்டி பிடிக்கும் உரிமை அக்குடும்ப ஆண்களுக்கு உரியதாகும். சிவன் முகத்தைக்கூடக் காணக்கூடாத வைதீகரான கணக்கு ஆசிரியர், மாணவர்களிடம் சைவன் வைணவன் என்றோ இந்து, பிற சமயத்தவன் என்றோ வேற்றுமை காட்டியதில்லை. அவரிடம் பார்ப்பனர், அல்லாதார் வேற்றுமை உணர்வு மின்னியதைக்கூட நாங்கள் கண்டதில்லை. புறத்தே வைதீகர்களாகக் காட்சியளித்த பலரிடம் ஊடுருவியிருந்த சமத்துவ, மனித உணர்வினை, வெளியே முற்போக்காளர்களாக நடித்துக் கொண்டிருக்கும் பலரிடம் நான் காணாது ஏமாறியது பிற்காலத்தில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/92&oldid=787799" இலிருந்து மீள்விக்கப்பட்டது