பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 OB நினைவு அலைகள்

தமிழக அரசுக்குப் பாராட்டு

தமிழக அரசு - அ.இ.அ.தி.மு.க அரசு - தமிழ் நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் பற்பல துறைகளில் தொண்டு ஆற்றியவர்களின் பிறந்த நாள்களைக் கொண்டாடும் புதிய மரபினைத் தொடங்கித் தொடர்ந்து காத்து வருகிறது.

அம் மரபினை யொட்டி, 28, 29 - ஆகஸ்ட் 1982 ஆகிய இரு நாள்களிலும் தமிழ்ச்சோலை திரு.வி.க.வின் நூற்றாண்டு விழாவை எடுத்தது.

சென்னையில் நடந்த விழாவில், முதல் நாள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் படி, அரசு என்னை அழைத்தது.

அழைப்பினைக் கண்டு மகிழ்வதற்கு முன்பு திகைத்தேன். ‘புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்’ - என்பது திருக்குறள்.

இன்றைய ஆட்சிக்குத் தலைமை தாங்கும் மாண்புமிகு, எம்.ஜி.இராமச்சந்திரனையோ இத்தகைய விழாக்களுக்கு ஏற்பாடு செய்யும் மாண்புமிகு ஆர். எம். வீரப்பனையோ, எப்போதோ ஒரு முறை அதுவும் பொதுவிடங்களில் மட்டுமே கண்டு வரும் என்னையும் நினைவில் கொண்டு, அவ்வப்போது அழைத்ததற்கு எப்படி நன்றி சொல்ல ?

திரு.வி.க.வின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும்படி அரசு அழைத்தது போன்றே சென்னை, கொண்டித்தோப்பில் கால் நூற்றாண்டிற்கு மேலாக இயங்கி வரும் மணவழகர் மன்றமும் என்னை அழைத்து, ஒருவேளை நிகழ்ச்சியில் பங்கு கொள்ளச் செய்தது.

என்னால் நேரடியாக எவ்வித உதவியும் பெறாதவர்கள், என்னை அழைக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியை எப்படிச் சொல்வேன்?

தமிழ்க் கடல் திரு.வி.க.

திரு.வி.க தமிழறிஞர்; உரிமை வேட்கை கொண்ட தமிழ் அறிஞர். அறிவு வேட்கை கொண்ட நல்லறிஞர்.

தமிழ் தேனினும் இனியது; கடலினும் பெரியது. அந்தத் தேன்கடலில் இறங்குவோர் கரையேறுதல் அரிது: பிற ஈடுபாடுகளில் நாட்டங்கொள்வது அருமை.

திரு.வி.க. தமிழ்க் கடலில் மூழ்கி, மூழ்கி முத்தும் பவழமும் கண்டெடுத்துக் கொணர்ந்தார். அவற்றைப் பொது மக்களுக்கு மீண்டும் வழங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/124&oldid=622986" இலிருந்து மீள்விக்கப்பட்டது