பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நினைவு அலைகள்

1942ஆம் ஆண்டு நடந்த ஆகஸ்ட் போராட்டத்தைக் குறிப்பிடுகிறேன்.

அப் போராட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வந்த நாளன்று திரு. சி. சுப்பிரமணியம் என்னிடம் தனியாகப் பேசினார்.

அப் போராட்டத்தில் அவருக்குப் பங்கு இருக்கலாம். அவரைக் காவல்துறை ஒற்றர்கள் கண்காணிக்கலாம்.

அவ் வீட்டில் தங்கியிருப்பதால் அரசு அலுவலில் சேர்ந்துள்ள எனக்கு ஏதாகிலும் தீங்கு நேரிடலாம். காவல்துறையினர் என் பெயரையும் சி. சுப்பிரமணியத்துடன் இணைத்து எழுதிவிட்டால், வேலை போய்விடக் கூடும்.

இவற்றை விளக்கமாகக் கூறிவிட்டு, ‘நீங்கள் தொடர்ந்து இங்கே இருக்க விரும்பினால், தாராளமாக இருக்கலாம். இந்த வம்பை விரும்பாமல் வேறு இடம் போய்விட விரும்பினால், நல்ல ஒட்டலில் ஏற்பாடு செய்யட்டுமா?’ என்று மிகுந்த பரிவுடன் கேட்டார்.

போராட்டத்தில் ஈடுபட விரும்பாவிடினும் நான் கோழையாகி, அங்கு இருந்து ஒட விரும்பவில்லை.

‘வருவது வரட்டுங்க, வீடு கிடைத்தால் போகிறேன்; இல்லாவிட்டால் தொடர்ந்து உங்களோடு தங்கியிருக்கிறேன்’ என்று பதில் கூறினேன்.

‘சரி அப்படியே செய்யலாம். எனினும் சில நாள்கள் வரை, இங்கு வருவோர்கண்ணில் படாமல் இருக்கப் பாருங்கள்’ என்று எச்சரித்தார்.

ஆகஸ்ட் போராட்டம் தொடங்கியது. கோவைப் பகுதியில் சூலூர் விமான நிலையத்தில் தீவைத்ததாகச் செய்தி வந்தது. நகரம் அல்லோலகல்லோலப்பட்டது.

அந்நாளும் அடுத்து சிலநாள்களும் நான் விடுதலைப் போராட்டத்தில் தொடர்பு கொண்டு இருந்த திரு. சி. சுப்பிரமணியத்தோடு தங்கியிருந்தேன்.

திரு. குலாம்தஸ்தர்ே எந்தப் பாவமும் செய்யாது பழியேற்றதைப் போன்று நான் குற்றச்சாட்டிற்கு ஆளாகாமல் தப்பியது, என்னுடைய திறமையால் அல்ல; தற்செயலாக நேர்ந்தது.

ஆகஸ்ட் போராட்டம் தொாடங்கிய பத்து நாள்களுக்குப் பிறகே, எனக்கு வீடு கிடைத்தது.

அப்படிக் கிடைக்கும் என்று தெரிந்ததும் சென்னைக்கு எழுதினேன்; என் மனைவியை அழைத்துக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/42&oldid=623350" இலிருந்து மீள்விக்கப்பட்டது