பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s 26 நினைவு அலைகள் திருவள்ளுவரே மீண்டும் வந்து, நம் கண் முன்னேயே திருக்குறள் முழுவதையும். ஒரே மூச்சில் பிழையற எழுதிக் கொடுத்தாலும், அவருக்கு நூற்றுக்கு அய்ம்பத்தொரு மதிப்பு எண்களுக்குமேல் கொடுக்க, எந்தத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் மனம் வராது. இத்தகைய கருமித்தனத்தை எல்லாத் துறைகளிலும் உள்ள தமிழர்களிடம் பார்த்து வருகிறேன். இதனால் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பல ஆண்டு. களுக்கு ஒரு முறையே எவரோ ஒருவர் வரலாறு, பொருளியல், அரசியல் பாடங்களில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவார். பல அனைத்திந்தியத் தேர்வுகளுக்குக் குறைந்த அளவு தகுதி, முதுகலை முதல் வகுப்பு என்று வைத்து விடுகிறார்கள். நம் பல்கலைக் கழகங்களோ எவருக்கும் முதல் வகுப்பு கொடுப்பது இல்லை. - ஆகவே, எவரும் தேர்வு எழுதக்கூட முடிவது இல்லை. அனைத்து இந்தியப் பணிகளை இப்படிக் கோட்டை விட்டுவிட்டு, அப்புறம் எந்தெந்தப் பிரிவுகளின் பேரிலோ காழ்ப்பை வளர்த்துக்கொண்டு நாமும் வீணாகிறோம். தமிழ் மக்களையும் வளரமுடியாமல் வீணடித்து வருகிறோம். o இவை என்னுள் எப்போதுமே உறுத்திவந்தன. பல்கலைக் கழகம் என்னும் கல்வி வைதீகக் கோட்டையின் மரபுகளை தனியாள் மாற்ற முடியுமா?’ என்று மலைத்தேன்! ஞாலம் கருதினும் கைகூடும் காலங் கருதி இடத்தாற் செயின்' என்னும் திருக்குறள் என் நினைவுக்கு வந்து நம்பிக்கை ஊட்டியது! நரசிம்மன் கோரும் சீர்திருத்தம் அவருக்காக அல்ல. சமுதாயத்தின் நலனுக்காக! எனவே, வாய்க்கும்போதெல்லாம் அதை ஆதரிப்போமென்று முடிவு செய்துகொண்டேன். “ஆகட்டும்” என்று நரசிம்மத்திற்குப் பதில் உரைத்தேன். நரசிம்மன் என்னிடம் வாக்குக் கொடுத்ததுபோல், பல ஆண்டுகள் தொடர்ந்து பகுதி நேரப் படிப்பின் வழியாக, இளங்கலை முடித்துவிட்டு, முதுகலைப் பட்டத்தையும், சட்டப் பட்டத்தையும் பெற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/66&oldid=788484" இலிருந்து மீள்விக்கப்பட்டது