பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடிப்பாள். அட, வெறும் ரப்பர் பாம்பு என்று மற்றவள் சொல்லிச் சிரிப்பாள். இந்த விளையாட்டு ஒரு சில நாள்களுக்கு அவர்களுக்கு மகிழ்வளித்தது. இவ்விதம் அவ் இருவரும் ஏதாவது குறும்புத்தனம் செய்து சந்தோஷம் அடைந்தார்கள். கால ஓட்டத்தில், ஏதோ மனபேதத்தால், இரு தோழிகளுக்குமிடையே பிணக்கு ஏற்பட்டது. அதனால் அவர்கள் நட்பும் முறிந்து போயிற்று. செல்லம்மாள் குடும்பத்திலும் பெரும் பிணக்கு தலைகாட்டியது. வைகுண்டம் பிள்ளை, மனைவி செல்லம்மாள் இருவருடன் பிள்ளை யின் தாயும் தம்பியும் உடன் வசித்தார்கள். முதியதாய் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனாள். தாய் இறந்த மறுநாளே அண்ணனுக்கும் தம்பிக்கும் சொத்துத் தகராறு எழுந்தது. பாகப் பிரிவினை பண்ண வேண்டும் என்ற சண்டை பெரிதாயிற்று. தம்பிக்கு கல்யாணம் ஆகியிருக்கவில்லை. இருப்பினும் அவன் பிடிவாதமாக தாயின் உடைமைகளில் அது இது வேண்டும் என்று முரண்டு பண்ணி, கூப்பாடு போட்டு அடம் பிடித்தான். குடும்பத்துக்கு வேண்டிய உறவினர்கள் கூட இருந்து முடிவு பண்ணி ஒருமாதிரியாக வீட்டிலிருந்த உடைமைகளை - உலக்கை அகப்பைகள், பாத்திர பண்டங்கள் அனைத்தையும் - இரண்டாகப் பிரிவினை செய்து கொடுத்து அமைதிப்படுத்தினார்கள். சொத்து ஆசை மனிதர்களை என்னமாய் ஆட்டிப் படைக்கிறது என்பதை எடுத்துக்காட்டியது அந்த நிகழ்ச்சி. தம்பி மறுநாளே தனது உடைமைகளுடன் வெளியேறினான். சில நாள்களில் வைகுண்டம் பிள்ளையும் மனைவியும் வேறு தெருவுக்குக் குடியேறினார்கள். நடுவில் இருந்த அந்த வீட்டுக்கு வேறொரு குடும்பம் வந்தது. குடும்பத் தலைவியான ஒரு விதவை. அவளது இரண்டு மகன்கள். மூத்தவன் காலேஜில் படித்துக் கொண்டிருந்தான். இளையவன் ஹைஸ்கூலில். காலேஜ் மாணவன் ஜாலிடைப். அவனோடு சேர்ந்த ஜாலி பிரதர்கள் தினசரி அங்கே வந்து டேரா போட்டு உல்லாசமாகப் பொழுது போக்குவார்கள். உல்லாசக் கதைகள் சொல்லி மகிழ்வார்கள். தங்கள் நகைச் சுவையை தாங்களே ரசித்து, வாய்விட்டுச் சிரிப்பார்கள். தம்பி அமைதியானவன். நிலைபெற்ற நினைவுகள் : 157