பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தன. அளவு சாப்பாடு என்பது வந்திராத காலம். விலையும் மலிவாகத் தான் இருந்தது. சாப்பிடுகிறவர்கள் வயிறு கொண்ட மட்டும், மனம் நிறைவுறுகிறபடி விருப்பம் போல் உண்டு மகிழலாம். தாமிரவர்ணி ஆறு அகலமாய் நகர்ந்து கொண்டிருந்தது. ஆற்றின் கடைசி அணை ரீவைகுண்டத்தில் அமைந்திருந்தது. இரு பக்கங் களிலும் கால்வாய்கள் அமைக்கப்பெற்று, சுற்றுவட்டார ஊர்களுக்கு விவசாயத்துக்காக சதா தண்ணிர் ஓடியது. அணைக்கட்டு காரணமாக ஆற்றின் மேல்புறம் தண்ணிர் தேங்கி நின்றதால், படுகையில் சகதி படிந்துகிடக்கும் கரையோரமாகத் தான் பெரிய விஷ்ணு ஆலயம் - நவதிருப்பதிகளில் ஒன்றான கள்ளர்பிரான் திருக்கோயில் இருந்தது. அதை ஒட்டி ஜனங்கள் குளிப்பதற்காக படிக்கட்டுகள் அதிகமாகவும் வசதியாகவும் கட்டப்பட்டிருந்தன. படிகளில் கொழுகொழு என்று சேறுபடிந்திருக்கும். குளிக்க இறங்குகிறவர்களின் பாதங்களோடு அது உறவாடும் அதன் பயனாக மக்களுக்கு சேற்றுப்புண் உண்டாகும். இது சகஜ நிகழ்வாக இருந்தது. ஆற்றை ஒட்டி கரைகள் உயர்ந்த மேடாக அமைக்கப்பட்டிருந்தன. கரைக்கும் நீரோட்டத்துக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு விசாலமாய், ஓங்கி வளர்ந்து நின்ற மருத மரங்கள் கொண்டதாய், பசுமையாய் அழகாகக் காட்சி தந்தது. கரைமீது நடந்து வெகுதூரம் உலா சென்று வர வசதியாக இருந்தது. ஊரின் ஒவ்வொரு திசையிலும் நான் மாலை நேரத்தில் நடந்து போய் வந்தேன். பசிய வயல்கள், அவற்றை ஒட்டிய சிவன் கோயில், குளக்கரை என்று நெடுகிலும் சுற்றிப்பார்த்தேன். அப்படித் திரிந்த ஒரு மாலையில் எதிர்பாராத விதமாக எனது பள்ளித்தோழன் ஒருவனை சந்திக்க நேர்ந்தது. நடராஜன் என்று பெயர். உயர்நிலைப் பள்ளி வகுப்புகளில் என்னோடு படித்தான். புத்திசாலி மாணவன். ஒவ்வொரு பாடத்திலும் நல்ல மதிப்பெண்கள் பெறுவான். பூரீவைகுண்டம் சப்ரிஜிஸ்ட் ரார் ஆபீசில் கிளார்க் வேலை பார்ப்பதாகச் சொன்னான். என்னைப் பற்றியும் விசாரித்தான். ஆபீஸ் பக்கத்திலே தான் இருக்கிறது. வாயேன் என்று என்னை அழைத்துச் சென்றான். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம் பிரிந்து போகையில், அடிக்கடி வா என்று சொல்லி வைத்தான். 210 : வல்லிக்கண்ணன்