பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-2.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் , 33 ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி போன்ற பெரிய எழுத்தாளர்களுக்கு மட்டும் கலைமகள் சன்மானம் அளித்து வந்தது. கதைக்குப் பதினைந்து ரூபாய். எனக்கு முன்னோடிகளான இப் பெரிய எழுத்தாளர்களின் கதைகள் வெளிவந்த இதழ்களிலேயே என் கதைகளும் பிரசுரமாகிக் கொண்டிருந்தது எனது மகிழ்ச்சியை அதிகப் படுத்தியது. அது எனக்குப் பெருமையையும் சேர்த்தது. அப்போது நான், இதர வகைக் கதைகளோடு, உருவகக் கதைகளும் எழுதிக் கொண்டிருந்தேன். ஆஸ்கார் ஒயில்ட் எனும் ஆங்கில எழுத்தாளர் ப்ரோஸ் போயம்ஸ் என்ற பெயரில் தனிரகமான கதைகள் எழுதிப் பெயர் பெற்றிருந்தார். அழகிய நடையில், கவிதைத் தன்மையோடு, எழுதப்பெற்ற சின்னச் சின்னக் கதைகள் தத்துவ நோக்கில், வாழ்க்கை இயல்புகளை எடுத்துக் கூறும் குட்டிக்கதைகள், ஒரு பக்கத்துக்குள் அடங்கிவிடும். இவான் துர்கனேவ் என்கிற ரஷ்ய இலக்கிய எழுத்தாளரும் அப்படிப்பட்ட "ப்ரோஸ் போயம்ஸ்’ எழுதியிருந்தார். அந்த விதமான தத்துவக் கதைகளை நான் தமிழில் எழுதினேன். அவை நல்ல கவனிப்பைப் பெற்றுக் கொண்டிருந்தன.