பக்கம்:நிழல் முகங்கள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VIII

நான் பயணித்த ரயிலில், ஒரு தமிழச்சி, பலார்ஷா ரயில் நிலையத்தில் காய்கறிக் கூடைகளோடு ஏறி, நூறு கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ரயில் நிலையத்தில் இறங்கி, இந்த இடைப்பட்ட வேளையில் ரயிலுக்குள்ளேயே வியாபாரம் செய்வாள். நடுத்தர வயதுப்பெண். இப்படி செய்வது அவளுக்கு அன்றாட வழக்கம் என்று கூறப்பட்டது. அந்த ரயில் பயலை கொஞ்சிக் குலாவி வெளிப்படுத்திய அவளது தாய்மையும், அங்கிருந்த ரயில்வே ஊழியத் தொழிலாளர்களிடம் அன்புச் சகோதரியாய் பேசிய பேச்சும் என்னை ஆட்கொண்டன. இவளையே, தமிழ்ச்செல்வியாக மாற்றினேன்.

பொதுவாக, முன்பெல்லாம் ஒவ்வொரு கிராமத்திலும் ஒருவர் மாடு மேய்த்துக் கொண்டிருப்பார். கிட்டே நெருங்கி விசாரித்தால், மலேசியாவில் காரோடும் பேரோடும் வாழ்ந்துவிட்டு, ஊரில் உறவினர்களால் ஏமாற்றப் பட்டவராகவே அவர் இருப்பார். எங்கள் ஊரில்கூட, நாற்பதாண்டுகளுக்கு முன்பு, எனது அம்மாவின் பங்காளிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி, அந்தக் காலத்தில் வியக்க வைக்கும் வில் வண்டியில் தடபுடலாக வந்து இறங்கினார். அப்போது, பாவாடை என்றால் என்ன என்று தெரியாத கிராமத்துப் பெண்கள், இந்தம்மா புடவைக்குள் போட்டிருக்கும் டவுசரைப் பற்றியே மலைப்பாகவும் வியப்பாகவும் பேசியது, இன்னும் என் நினைவிற்கு வருகிறது. இறுதியில், இந்த படைப்பில் வரும், தமிழ்ச்செல்வியின் அம்மா போல், உடலும் உள்ளமும் செத்தவளாய் ஏதோ புலனுக்குப் புரியாத ஒன்று, அவளை இயக்குவதுபோல், மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாள்.

இலங்கையில் அமைதிப்படை தங்கியிருந்தபோது, யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி, வவுனியா போன்ற பகுதிகளையும், திரிகோணமலை, மட்டக்களப்பு போன்ற தனித்தனிப் பகுதிகளுக்கு பத்திரிகையாளர்களோடு கூட்டாகவும், வானொலி செய்தி ஆசிரியர் என்ற முறையில் தனிமையாகவும் பலதடவை சென்றிருக்கிறேன். வடக்கு கிழக்குப் பகுதி தமிழர்களுக்கு மண்வாசனையில், பேச்சு வழக்கில், வேறுபாடுகள் நிறைய உண்டு. கிழக்குப் பகுதியில், மூர்கள் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்கள், தமிழர்களேயன்றி வேறில்லை. ஆனால், யாழ்ப்பான மேலாண்மை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுக் கட்டாயத்தால், இவர்கள் தமிழர் என்ற நினைப்பிலிருந்து அந்நியப்பட்டு, தங்களை இஸ்லாமியர்களாக மட்டுமே பாவிக்கிறார்கள். இந்த அனுபவங்கள், இந்த நாவலை யதார்த்தமாய் நிறைவு செய்கின்றன.

1991 ஆம் ஆண்டே இந்த நாவலுக்கு முன்னுரை எழுதிக் கொடுத்த இலக்கிய யோகி, பெரியவர். வல்லிக்கண்ணன் அவர்களுக்கும், இந்தப் படைப்பை நன்கு விமர்சித்த பத்திரிகைகளுக்கும், முதல் பதிப்பை வெளியிட்ட தமிழ்ப் புத்தகலாய உரிமையாளர் திரு. அகிலன் கண்ணன் அவர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/10&oldid=588148" இலிருந்து மீள்விக்கப்பட்டது