பக்கம்:நிழல் முகங்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 87

இப்போது நவாப்ஜான் கோபப்பட்டு எழுந்திருக்கப் போனான். கல்யாணியின் வசவு வார்த்தைகள், அவன் போட்ட சாராயத்திற்குப் போதையானது. "விடுடா மச்சான். பார்த்திட வேண்டியதுதான்" என்று எழுந்திருக்கப் போனவனை, இப்போது பலராமனை அமுக்குப்பிடி போட்டுப் பிடித்தான். கீழே சண்டை போடுவது போல் புரண்டு கொண்டிருந்தவர்களைப் பார்த்த மெக்கானிக் நாராயணன், "வெளில வாங்கடா என்று சொன்னபடியே எழுந்தான். லைட்டைப் போட்டான். சுற்றுமுற்றும் பார்த்தான். சர்தார்ஜி சரிந்து விட்டார். சீனிவாசன் குப்புறப்படுத்துக் கொண்டு கிடந்தான். நவாப்பும், பலராமனும், நாராயணனிடம் அந்தப் பெண்களைச் சுட்டிக்காட்டி சைகை செய்தார்கள். உடனே நாராயணன் அந்த இருவரையும் வெளியே வரும்படி சைகை செய்தான். அவர்கள் முன்னங்கையை ஊன்றி, உள்ளங்கையில் தலை வைத்து, அந்தப் பெண்களையே பார்த்தார்கள்.

அவர்களோ, விளக்குக் கூச்சத்தை மறைப்பதுபோல், கரங்களை கண்களில் மூடி, படுத்துக் கிடந்தார்கள். நாராயணன், நவாப்பின் கால்களையும், பலராமனின் காலையும், கைக்கு ஒன்றாகப் பிடித்து கிடாவை இழுப்பதுபோல் இழுத்தான். உடனே இருவரும் எழுந்தார்கள். பின்னர் அந்த மூவரும், ரயிலுக்கு வெளியே வந்தார்கள். பீடியைப் பற்ற வைக்கப்போன பலராமன் அந்த ராமகுண்ட அக்கினி நெடிக்கு அடிபணிந்து, பீடியைக் காதில் சொருகிக் கொண்டே கேட்டான்.

"இன்னா வார்த்தை கேட்டுட்டா. பார்த்தியா. வாத்தியாரே. பொறுக்கியாம். புறம்போக்காம். கேட்கக்கூடிய கேள்வியா இது..?"

"அவள் கேட்டதுல என்னடா தப்பு. நான் உங்களுக்கு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன். குடிச்சிட்டு பப்ளிக்கா வரப் படாதுன்னு சொல்லிச் சொல்லி எனக்கு வாயே வலிச்சுப் போச்சு. கேட்டீங்களாடா. அவள்க முன்னால அண்ணங்களாய் ஒழுங்காய் நடந்தீங்க. அவள்களும் தங்கச்சிகளாக நடந்தாங்க. அப்புறம் குடி காரனாய் காட்டுனிங்க. அவளுக நீங்க ஏடாகோடமாய் நடந்துடப் படாதேன்னு எச்சரிக்கையாய் கத்தினாங்க. இது என்னடா தப்பு.?"

"என்னப்பா இது. ஒரு வாட்டியா..? ரெண்டு வாட்டியா..? எத்தன வாட்டி கேட்டுட்டாளுக? பொறுக்கியாம். புறம்போக்காம். டேய் சாய்பு பையா விடுடா மச்சான்."

"என்னடா செய்யப் போற.?"

"குடிக்கிறது தப்பா...? குடிச்சுட்டு ஒன் கையை பிடிச்சு இழுத்தோமா? காலைப் புடிச்சு இழுத்தோமான்னு அவளண்ட கேட்கப் போறேன்."