பக்கம்:நிழல் முகங்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 க. சமுத்திரம்

கைகளை நெறித்தாள். உடனே பலராமன் "ஒங்களை பத்திரமாய் வீட்டுக்கு அனுப்பிடுறோம். கவலப்படாதீங்கம்மா.. எத்தனையோ தறுதலைகளுக்கு உதவி செய்திருக்கோம். ஒங்களுக்கு செய்ய மாட்டோமா" என்று சொன்னாலும், அந்தம்மர், "நேனு எட்ல விஜயவாடாக்கு போவாலி' என்று மாறி மாறிப் புலம்பிக் கொண்டிருந்தாள்.

அந்தப் பெட்டிக்குள், இன்னொரு புது மனிதர் இருந்தார். காசிப்பேட்டில் ஏறி, கூடுரில் இறங்கப் போகிறவர். அந்த ரெய்ச்சூரைப் பற்றி யாரும் கேளாமலே விளக்கம் கொடுத்தார்.

"இந்த ரெய்ச்சூர் ஒரு காலத்துல விஜயநகர சாம்ராஜ்யத்துல கொடி கட்டிப் பறந்தது. அதோ புகையாய் தெரியுது பாருங்க. அது அனல் மின்சார நிலையம். இந்தப் பகுதியில் கிருஷ்ணாநதி ஓடுது. வெறுமையாய் ஓடுது. இந்த கன்னடத்துக்காரங்களுக்கு இந்த நதியைப் பயன்படுத்தி விவசாயம் செய்யத் தெரியலே. கேட்டால் உப்புக் கறிக்கிற நீரு. விவசாயத்துக்கு ஆகாதுன்னு சோம்பேறித் தனமாய் சொல்றாங்க. இதிலிருந்து ஐம்பது மைல் தொலைவில் ராகவேந்திரா சுவாமிகள் சமாதியடைந்த இடம் இருக்கு. துங்கபத்ரா ஆற்றுக்கரைமேல இருக்குது. தல்லி. அம்மா. மீரு. ஏமி பயப்பட ஒத்து. நேது கடப்பாக்கு போந்து நான்னு. அக்கட நின்டி நின்னு, விஜயவாடாக்கு பஸ்ஸு எக்கிஸ் தாலு." என்று தமிழும் தெலுங்குமாய் ஜமாய்த்தார்.

எல்லோரும் அந்த மனிதரையே பார்த்தார்கள். நாற்பத்தைந்து வயது எண்ணெய்க்கறுப்பு மனிதர். யார் கேட்கிறார்களோ இல்லையோ. அவராகவே பேசிக் கொண்டிருந்தார். இதற்குள் பலராமன், நவாப்ஜானின் காதைக் கடித்துவிட்டுப் பொதுப் படையாகப் பேசுவது போல், அந்தப் பெண்களுக்குக் கேட்கும்படிக் கத்தினான்.

'நாங்க யார் யாருக் கெல்லாம் எங்க இடங்களைக் கொடுத்தோமோ அதை இப்பவே காலி செய்திடணும். ஏன்னா ஸ்கோட்காரன் வாரான், நாங்க சீட் கொடுத்தது தெரிஞ்சா எங்க வேலை போயிடும். அதனால அல்லாரும். இப்ப்வே இறங்கி ரிசர்வ் செய்யப்படாத பெட்டிக்குள்ளே ஏறிக்கணும்."

அந்த டில்லிப் பெண்கள், ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு, பலராமனை ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். சீனிவாசனோ, தனது ஒற்றை இடத்தை அந்தப் பெண்களுக்கு விட்டுக் கொடுப்பவன் போல் எழுந்து நின்றான். பலராமன், நேரடியாகவே அந்தப் பெண்களிடம் இடத்தைக் காலி செய்யுங்கள் என்று சொல்லப்