பக்கம்:நிழல் முகங்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சு. சமுத்திரம்

உடனே ஜிப்பாக்காரர், "இந்த கடப்பா. பளிங்குக் கற்களுக்குப் பெயர் போனது. அதோடு இது நம்ம ராமநாதபுரம் மாதிரி. இங்கே கொலை சர்வசாதாரணம். ஒரு கொலை வழக்குல 144 பேர் குற்றவாளிங்கன்னா பார்த்துக்கங்களேன். அற்ப காரணத்துக்காகக் கூட கொலை செய்வாங்க. உதாரணமாய். ஒருத்தன் மணி என்னவென்று கடிகாரம் கட்டியவனைப் பார்த்துப் கேட்பான். கடிகாரக்காரன் நேரத்தைச் சொல்ல லேட்டாகுதுன்னு வச்சுக்குவோம். அவ்வளவுதான். கடிகாரக்காரனின் கை இருக்காது."

அந்த தெலுங்கம்மா, தமிழ்ச்செல்வியைப் பார்த்தாள். பிறகு அவள் தலையைக் கோதிவிட்டாள். "தேவுடுமேனு யு சேகாக்கா. பகவன் துடு நின்னு காப்பாடு காகா" என்று சொன்னபடியே நகர்ந்தாள். தமிழ்ச்செல்வியும், அந்தம்மாவும் ஒருவரை ஒருவர், ஆடாமல், அசையாமல் பார்த்துக் கொண்டார்கள்.

தெலுங்கம்மாவும், ஜிப்பாக்காரரும் கீழே இறங்கி விட்டார்கள். நவாப்பும், பலராமனும், இறங்கப் போனார்கள். போகிற போக்கில், தமிழ்ச் செல்வியைப் பார்த்து, "உங்களுக்கு என்னம்மா வேணும்" என்று கேட்டபோது, அவள் எதுவும் வேண்டாமென்று சைகை செய்தாள். உடனே நேற்றிரவு திட்டிய, அதே அந்த காஞ்சனா, அவர்களைப் பார்த்துக் கேட்டாள்.

"எங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வரப்படாதா...? கேட்கப்படாதா..?”

பலராமனும், நவாப்ஜானும் அவளை முகச் சருக்கத்தோடு பார்த்தார்கள். பிறகு பலராமன் மடமட வென்று கொட்டினான்.

"நல்லா கேளுங்கம்மா. நான் ஜாதில பறையன்தான். இவன் சாய்புதான். தொழில் என்னமோ பெட்டியைக் கழுவுறதுதான். ஆனாலும் நீங்க நினைக்கிறது மாதிரி பொறுக்கிங்க இல்ல. குடித்தது. தப்புத்தான். இல்லங்கல. அதுக்காக இப்படியா திட்டுறது."

கல்யாணியும், காஞ்சனாவும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். பிறகு பலராமனிடம் பேசப் போன வெறுங் கழுத்தை, கல்யாணக் கழுத்து தடுத்துப் பார்த்தது. அதையும் மீறி காஞ்சனா, ரகசியக் குரலில் பேசினாள். அவர்கள் இருவரையும் தன் பக்கம் வரவழைத்துப் பேசினாள்.

"நேற்று ராத்திரி என்ன நடந்தது தெரியுமா?"