பக்கம்:நிழல் முகங்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

சு. சமுத்திரம்

தமிழ்ச்செல்வியை பிடித்திருந்த கும்பலை நோக்கி, பலராமனும், நவாப்ஜானும் தலைதெறிக்க ஓடினார்கள். இதற்கு முன்பாக, அந்த ரயில் பயல் ஓடினான். இவர்களுக்குப் பின்னால் மெக்கானிக் நாராயணனும், சர்தார்ஜியும் ஒட முடியாமல் சிறிது இடைவெளி விட்டு ஓடினார்கள். ரயில் பெட்டிக்குள் பொம்மைத் தலைகள் சொருகி வைக்கப்பட்டது போல, பல தலைகள் ஜன்னலுக்கு வெளியே நீண்டன. இதற்குள் ஒரு சிலர் கீழே இறங்கப் போனார்கள். பின்னால் சர்தார்ஜி ஒடுவதைப் பார்த்துவிட்டு, சிலர், "டெர்ரரிஸ்ட் டெர்ரரிஸ்ட்" என்று ஆங்கிலத்திலும், "அய்யய்யோ. சீக்கியப் பயங்கரவாதி. எத்தன பேரைச் சுட்டானோ. இன்னும் எத்தனை பேரை சுடப் போறானோ" என்று அலறினார்கள். சிலர் ரயிலுக்குள் பெஞ்சுக்கு அடியில் கூடப் படுத்துக் கொண்டார்கள். இதில் ஒரு கொடுமை என்னவென்றால், கீழே இறங்கப்போன ஆயுதந்தரிந்த ரயில்வே போலீஸ்காரர்கள்கூட, அந்த நிராயுதபாணி சர்தார்ஜிக்குப் பயந்து பெட்டிக்குள் பம்மிக் கொண்டார்கள். சும்மா சொல்லக் கூடாது. அவர்களும் வீரர்கள்தான். சாதாரணப் பிரயாணிகள் போல், பெஞ்சுகளுக்கு அடியில் படுக்காமல், நின்று கொண்டு இருந்தார்கள். -

இந்த அமளியைப் பற்றிக் கவலைப்படாமல், நவாப்ஜானும், பலராமனும் முன்தொடர, நாராயணனும் சர்தார்ஜியும் பின் தொடர்ந்தார்கள். இடையிடையே ஒரு சிலர் சேர்ந்து கொண்டார்கள். இதற்கிடையே, அந்த முரடர்களிடம் போராடிக் களைத்தோ அல்லது போராடிப் பயனில்லை என்று நினைத்தோ, அவர்கள் இழுத்த இழுப்பிற்குக் கால்களை நகர்த்திய தமிழ்ச் செல்வியின் காதுகளில் "டேய். டாய்" என்று பரிச்சயமான குரல்கள் ஒரு அசுர பலத்தைக் கொடுத்தது. முரடர்களிடம் சிக்கிய தனது இரண்டு கரங்களையும் சுண்டியிழுத்தாள். இதனால் ஒருத்தன் குப்புற விழுந்தான். ஒருத்தன் அவள் கையை விட்டுவிட்டு இரும்புக் கிராதி வேலியில் இருந்த ஒரு இடைவெளிக்குள் உடம்பைத் திணித்துக் கொண்டிருந்தான்.

இதற்குள், நவாப்ஜானும் பலராமனும் இரண்டு பேரைப் பிடித்துக் கொண்டார்கள். பின்பக்கமாக ஒடிய இரண்டு பேரை சர்தார்ஜியும், நாராயணனும் பிடித்து இழுத்துக் கொண்டார்கள் தமிழ்ச்செல்வியைக் கைப்பற்றிய அந்தக் கூட்டத்தைச் சுற்றி மனித வட்டம் ஏற்பட்டது. இரும்புக் கிராதிக்குள் உடம்பைக் கொடுத்தவன் எப்படியோ நெளிந்து வெளியேறி விட்டான். ஆசாமி இந்த மாதிரி கடத்தல் விவகாரங்களில் அனுபவசாலி என்பது போல், வெளியே போனதும் ஓடாமல் ஏதும் அறியாதவன் போல், நிதானமாகவும் திரும்பிப் பாராமலும் நடந்தான்.