பக்கம்:நிழல் முகங்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சு. சமுத்திரம்

தமிழ்ச்செல்வி, எல்லோருக்கும் முதுகைக் காட்டியவாறே, ரயில் ஜன்னலைக் குனிந்து பார்த்து, வெளியே நகராமலே நகர்வதுபோல் காட்டிய மரங்களையும், மலைகளையும் பார்த்தாள். தாமரைப் பாண்டியன், "செல்வி. செல்வி. தப்புச் செய்தவனுக்கு மன்னிப்பே கிடையாதா..? கிடையாதா..? " என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். பண்ணையாள், "இந்தப் பையன் திருந்திட்டாம்மா." என்று அவ்வப்போது குரல் கொடுத்தான். ம்ெட்ராஸ் வாத்தியார் "கஸ்மாலத்தைக் காலால உதறி எறிம்மா. அந்தக் கயிதையை, நீ என்ன சொன்னாலும், அதுக்குக் கட்டுப்பட வைக்கேன்" என்றான்.

தமிழ்ச்செல்வி, சட்டென்று திரும்பினாள். அந்தச் சமயத்தில் விவகாரத்தை ஆழம் பார்ப்பதற்காக உடம்பை எங்கேயோ மறைத்து வைத்துக்கொண்டு, முகத்தை மட்டும் காட்டிய ரயில்வே இன்ஸ்பெக்டரைப் பார்த்து, அமைதியாகச் சொன்னாள்.

"இன்ஸ்பெக்டர் ஸார். அவங்களை விட்டுடுங்க."

"விட்டுடலாம். ஆனால், இது குடும்ப விவகாரமுன்னு நீங்க. வாக்குமூலம் மாதிரி எழுதிக் கொடுக்கணும்."

“எது எழுதி வாங்கணுமுன்னாலும் எஸ்.11 பெட்டிக்கு வந்து எழுதி வாங்கிக்கலாம்."

தமிழ்ச்செல்வி, புறப்படப் போனாள். தாமரைப்பாண்டி, "ஊருக்குப் போனதும், ஒன் சொத்தை ஒப்படைக்கேன். ஒன் மனசு. பெரிய மனசு என்று உளறிக் கொட்டினான். உடனே அவள், "நான் யார்கிட்டேயும் இப்போ எதையும் கேட்கிற நிலையில் இல்லை. மனச்சாட்சி இருந்தால். அது சொல்றபடி நடந்தால் போதும்." என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமலே தனியாய் நடந்தாள். ரயில் பயல் மட்டும், அவள் பின்னால் நடக்க முடியாமல் ஓடினான்.

இதற்குள் ரயில்வே இன்ஸ்பெக்டர் சொல்லப் பொறுக்காதது போல் தாமரைப்பாண்டியன் கையில் கட்டிய கயிற்றை அவிழ்க்கப் போனார். சர்தார்ஜி, இன்ஸ்பெக்டர் கைகள் இரண்டையும் கெட்டியாகப் பிடித்தபடியே, ஆணித்தரமாகப் பேசினார்.

"மொதல்ல. இந்த ஆசாமி. அந்தப் பொண்னோட சொத்து முழுவதையும் ஒப்படைக்கறதாய் எழுதித் தரணும். தமிழ்ச் செல்வியை, கடத்த முயற்சி செய்ததை ஒப்புக்கொள்ளணும். அப்போதான் கட்டை அவிழ்க்கலாம்."

"கண்டிப்பாய் எழுதிக் கொடுக்கேன். இந்தக் கட்டை அவிழ்த்த உடனேயே எழுதிக் கொடுத்துடுறேன். ஸார்."