பக்கம்:நிழல் முகங்கள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சு. சமுத்திரம்

"இதைவிட எப்படித்தான் மட்டம் தட்டமுடியும்? நான் சுயமரியாதைக்காரி. கோழையல்ல. தனித்திருக்கவும் தயாராகி விட்டவள். ஒரு பெண்ணுக்கு ஆண்துணை வேணும் என்கிறதுக்காக எவனை வேண்டுமானாலும் கட்டிக்கலாம் என்கிற கட்சியல்ல என் கட்சி. நல்ல மனிதருக்கு ஒரு சொல். நல்ல மாட்டுக்கு ஒரு அடி என்பது பழமொழி."

"ஐ அம் ஸாரி”

"நான் என் கதை முழுசையும் ஒப்புச்சேன். நீங்க அதை கொச்சைப்படுத்திட்டது மாதிரி தோணுது. நான் யாரையும் மாமா மகன்னு பாசத்துல மன்னிக்கலே. மனிதாபிமானத்திலே மன்னித்தேன். அது மானங் கெட்டத்தனமாகாது."

"சரி. இதுக்கு மேலே இந்தப் பேச்சு வேண்டாம்"

தமிழ்ச்செல்விக்கு விளக்கம் சொல்லப்போன காஞ்சனா, சர்தார்ஜி இறுதியாகச் சொன்ன கட்டளைப் பேச்சைக்கருதி, வாயடைத்துப் போனாள். ரயில் பயல், "ஏஹே. ஹே.." என்று சொல்லிக் கைதட்டினான். தாமரைப்பாண்டியன், தலை கவிழ்ந்த படியே எழுந்தான். அங்குமிங்கும் பராக்குப் பார்ப்பவன்போல் நின்றுவிட்டு, நகரப் போனான். சர்தார்ஜி, தீர்ப்பளிப்பவர் போல் பேசினார்.

"இந்தாப்பா. ஒன்பேரு என்ன. ஆம். தாமரைப்பாண்டி. தமிழ்ச்செல்வி பெருந்தன்மையாய் நடந்துட்டு. நீயும் பெருந்தன்மையாய் நடந்துக்கதுதான் நல்லது. அதாவது உனக்கு இந்தப் பொண்ணு. நினைத்தால் ரயில்வே தொழிலாளர் ஒத்துழைப்போடு உன்னை ஒரு வருஷத்துக்காவது கம்பி எண்ண வைக்கமுடியும். ஆனால் அந்தம்மா மனசு கேட்கலே. அதனால நீ அவங்க கேட்காமலே கொடுக்கணும்."

தாமரைப்பாண்டி, "கண்டிப்பாய் ஊருக்குப் போனதும் முதல்வேலை. அதுதான்." என்று சொன்னபடியே திரும்பினான். முதுகைக் காட்டினான். அப்புறம் முழுவதுமாக மறைந்தான் பலராமன் சூடுசூடாய் பேசினான்.

"இந்தப் பயலை விட்டது தப்பு. எனக்கென்னமோ அந்தப் பயல் திருந்துனது மாதிரி தெரியல. நரிப்பயல், ஓநாய்ப்பயல், நம்பப் படாது. தமிழ்ச்செல்விக்கு சொத்தக் கொடுப்பான்னு நம்பிக்கை இல்ல."

"அப்படிப்பட்ட உபகாரம் செய்யாட்டியும் உபத்திர வம் செய்யாமலாவது இருப்பானா. எனக்கென்னமோ அவனை விட்டிருக்கப்படாதுன்னு தோணுது சர்தார்ஜி"