பக்கம்:நிழல் முகங்கள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 119

"நீ வேறப்பா. சென்ட்ரல் போலீஸ்காரன், நீங்க சொல்றதை யெல்லாம் கேட்பான்னு நினைக்கே அஞ்சு ரூபாய் பத்து ரூபாய் கிராக்கிகள் விஷயத்துல நீங்க சொல்றதை கேட்டாலும் கேட்பான். ஐயாயிரம் ரூபாய் பத்தாயிரம் ரூபாய் ஆசாமிகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒங்களைக்கூட உள்ள தூக்கிப்போடுவான். இதுதான் இந்த நாட்டோட தலைவிதி போலீஸ்காரன் செய்யாத ஞாயத்தை நாம் செய்துட்டோம். அவ்வளவுதான். சே மழை என்ன இப்படி பெய்யுது. யோவ். நவாப் இப்படிவாய்யா. ஒன் தலையில தண்ணீர் குளம் மாதிரி நிக்கது தெரியல..."

"எனிக்கு இதுல்லாம் அத்துபடி ஸாரே. மெட்ராலை"க்கு என்ன வந்ததுன்னே தெரியல. ஒரு வருஷமாய் ஒரே புயல் மழை. செத்தும் கொடுத்தான் சீதக்காதி. இந்த மழை என்னை மாதிரி ஏழைங்களை பெய்தும் கெடுக்கும், பெய்யாமலும் கெடுக்கும். பெய்தால் கார்ப்ப ரேஷன் பள்ளிக்கூடம். பெய்யாட்டி கார்ப்பரேஷன் தெருக்குழாய். என் சம்சாரமும் குழந்தைங்களும் இந்நேரம் எந்த கார்ப்பரேஷன் ஸ்கூலுல இருக்குதுங்களோ, டிவிக்காரன் வந்தால் தான் சோறு போடுவாங்கோ. அவன் மழை நின்னால்தான் வருவான். அடச்சீ. உட்காருடா. ஒன் நாய்னாவை யாரும் தூக்கிட்டுப் போயிட மாட்டாங்க. மவனே. இறங்குனே. முதுகு பிஞ்சுடும்.”

காஞ்சனா, தலைமுடியை முன்புறமாகக் கொண்டு வந்து பின்னலிட்டபடியே கேட்டாள்.

"இவன் எதுக்காக இங்கேயே இறங்கப் பார்க்கான்'

"நாங்கெல்லாம் இவனுக்கு சின்ன நாய்னாக்கள்தான். இவனுக்கு ஒரேஒரு நாய்னா. மெக்கானிக் சுந்தரம். இந்த ரயில் புறப்படாததால. இறங்கி. எலெக்டிரிக் ரயிலுல போகப் பார்க்கான். சுந்தரத்தைப் பார்க்க அவ்வளவு ஆசை. பயலுக்கு."

ரயில் பயல், உள்ளே வந்து நவாப்பை செல்லமாக அடித்தான். பிறகு, தமிழ்ச்செல்வியைத் தொட்டுக்காட்டி, தலையை மறுத் தாட்டிக் காட்டினான். அதாவது அந்தம்மாவை இடையில் விட்டு விட்டுப்போக மாட்டானாம்.

அந்த ரயிலின் தவத்திற்கும், அதன் ஊளை மந்திரத்திற்கும் பயன்கிடைத்தது. சென்ட்ரல் ரயில் நிலைத்திற்குள் நுழைவதற்கு, பச்சை விளக்கு பளிங்குக் கண்போல் மினுக்கிக் காட்டியது. டிரைவருக்கு அவசரமோ என்னமோ.. எடுத்த எடுப்பிலேயோ மேகம் போட்ட இடிக் கூச்சலும், ரயில் போட்ட தடிக்கூச்சலும், ஒருவித பயங்கரத்தை உருவாக்கின.

எல்லோரும் பரபரத்து இயங்கியபோது, ரயில் நிலையத்திற்குள் வந்துவிட்டது. அந்த இடி மழையிலும், அப்படி ஒரு கூட்டம்.