பக்கம்:நிழல் முகங்கள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திழல் முகங்கள் 121

தமிழ்ச்செல்வி விம்மினாள். அந்த தோழர்கள் காட்டிய அன்பு வெள்ளத்தில் மூழ்கி மூழ்கி மூச்சு வாங்கினாள். இதற்குள் எங்கேயோ போய்விட்டதாக கருதப்பட்ட ரயில் பயல், ஒருவரின் கையைப் பிடித்து, அவரை இழுத்துக் கொண்டு, வருவது மாதிரி வந்தான். மெக்கானிக் சுந்தரம். ஐம்பது வயதிருக்கும். பக்கவாட்டில் படர்ந்த மேனி, வட்டமாகக் குனியாமலும், நெட்டையாகக் கோணாமலும் உள்ள முகம். அந்தப் பயலை, வாஞ்சையோடு பார்த்தபடியே உள்ளே வந்தார். அவர், நவாப்ஜான், கோஷ்டியை நெருங்கியதும், ரயில் பயல், தமிழ்ச்செல்வியின் கைன்யப் பிடித்த படியே, நவாப்ஜானைப் பார்த்து, சுந்தரத்திடம் சொல்லும்படி, சைகை செய்தான். உடனே, நவாப், சுந்தரத்திடம், தமிழ்ச் செல்வியைப் பற்றிச் சுருக்கமாகக் சொல்லிவிட்டு, "சிஸ்டரு. இன்னிக்கு நைட்ல ஒங்க பொறுப்புல இருந்தால் நல்லது. இந்த மழையிலயும், இன்னும் வேறு சில காரணத்தாலயும் அது வெளில போக முடியாது" என்றான்.

சுந்தரம் சிறிது யோசிப்பவர்போல் மோவாயைக் கையால் தடவினார். உடனே ரயில் பயில், அவர் கையை எடுத்து, அவர் இடுப்பை அடித்துக் கோபத்தைக் காட்டினான். பிறகு, தமிழ்ச் செல்வியின் கையைப் பிடித்துக் கொண்டு "அம். அம்." என்றான். சுந்தரம் ஒரு முடிவுக்கு வந்து, அதை தமிழ்ச்செல்வியிடமே சொன்னார்.

“ஒன்னோட கதையைக் கேட்டதில் இருந்து கஷ்டமாய் இருக்குது. ஆனாலும் இந்தப் பயலோட கதையைவிட ஒன் கதையோ என் கதையோ பெரிசில்ல. உனக்கு ஆட்சேபம் இல்லன்னா இன்னிக்கு நீ என் ஒர்க் ஷாப்புல தங்கிக்கலாம்."

தமிழ்ச்செல்வி தயங்கியபோது, ரயில்பயல், நரிப்பயலாய் ஊளையிட்டு, அவள் கையைப் பிடித்து இழுத்தான். உடனே அவளும், "அப்போ வாறேன். உங்களைக் கண்டிப்பா வந்து பார்ப்பேன். நம்ம உறவு ரயில் சிநேகிதம் இல்ல. ரத்தத்துக்கும் அப்பாற்பட்ட உறவு" என்று ரயில்வே நண்பர்களிடம் சொன்ன படியே, சுந்தரத்தின் பின்னால் நடந்தாள். வழியில் டில்லிப் பெண்களைப் பார்த்தாள். சற்றுத் தொலைவில், அதோ அந்த சீனிவாசனும் போய்க் கொண்டிருந்தான். இப்போதாவது வெறுங்கழுத்து காஞ்சனா அவனை அங்கீகரிப்பாள் என்று அவனுக்குள் ஒரு ஆசை. அந்த ஆசைக்குள் அவன் அல்லாடிய படியே அவன் "ஓரங்கட்டி" நடந்தான்.