பக்கம்:நிழல் முகங்கள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சு. சமுத்திரம்

கம்பிகளை வளைத்துக் கொண்டும் உழைப்பு மயமாகத்

தோன்றினார்கள். அதைக் கலைக்கும்படி அந்தப் பெண், இரும்புக்

கம்பியைக் கையில் பிடித்தபடி, தமிழ்ச்செல்வியை நோக்கித் தாவிய படியே கூச்சலிட்டாள்.

"ஏண்டி குடி கெடுப்பாள். நரி ஆட்டைக் கடிச்சு. மாட்டைக் குடிச்சு, அப்புறம் ஆளைக் கடிக்கது மாதிரி என் புருஷன்கூடப் பார்க்கிலே பழகிட்டு, பீச்சிலே பேசிட்டு. இப்போ அவரோட படுக்கையறைக்கே வந்துட்டே வாடி என் வீட்டுக்கு ஒன்னைக் கூட்டிட்டுப் போறேன். சக்களத்தியாய்."

எல்லோரும் அதிர்ச்சிப்பட்ட அந்த சமயத்தில், தனது புதுவேட்டியை அழகு பார்த்துக் கொண்டிருந்த ரயில் பயல், தமிழ்ச்செல்வியை நெருங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் குறுக்காய்ப் போய்த் தடுத்தான். அவள் கையை, எக்கிக் குதித்துப் பிடித்து, இரும்புக் கம்பியைப் பிடித்தபடியே, அவள் நகரவிடாமல் கீழே உட்கார்ந்தான். அவள், அந்தக் கம்பியோடு சேர்ந்து குனிந்தாள். அதிகநேரம் குனிய முடியாமல் போனதால், கம்பியை விட்டுவிட்டு நிமிர்ந்தாள். கீழே கிடந்த பயலைக் காலால் இடறினாள். அவன் கழுத்தைப் பிடித்துக் தூக்கிக் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள். "இன்னிக்குத் தாண்டா தெரியுது. அந்தப் படுபாவிக்கும் இவளுக்கும் நீ கள்ளப் பிள்ளையாய்ப் பிறந்திருக்கே" என்று அவனை மாறிமாறி அடித்தாள்.

அந்தப் பயலுக்கு, அதைக் கேட்டதும், கொஞ்சம் சந்தோஷ மாய்த்தான் இருந்தது. ஆனாலும், அவள் அடித்த அடியில், பிடித்த பிடியில், சுருண்டு கொண்டு இருந்தான். சுந்தரம், அங்கே துடிதுடித்து வந்தார். அவளிடமிருந்து பயலைப் பிடுங்கிக் கொண்டு, "பெண்டாட்டியை கைநீட்டி அடிக்கிறவன் மனுஷன் இல்லன்னு நான் நினைக்கிறவன். இருபத்தஞ்சு வருஷமாய் இதை விரதமாய் வைத்திருக்கவன். என்னை மனுஷன்ல இருந்து மாத்திடாதடி இனிமேல் இவன் மேல் கை பட்டுது. அப்புறம்."

"ஏன் கள்ளப்பிள்ளையை அடிச்சதும் துடிக்குதோ..."

இதற்குள், எல்லாத் தொழிலாளர்களும், அங்கே கூடி விட்டார்கள். மெக்கானிக் சுந்தரத்தைப் பரிதாபத்துடன் பார்த்தார்கள். இவர்களுக்குத் தலைவர்போல் இருப்பவர் இந்த சுந்தரம். அதிகமாகப் பேசவும் மாட்டார். பேச்சு வாங்கவும் மாட்டார். அப்படிப்பட்டவருக்கு இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டது கண்டு, அவர்களும் திகைத்துப் போய்க் கூடி விட்டார்கள், என்பதற்கு அவர்கள் கரங்களில் இருந்த கருவிகளே சாட்சி கூறின.