பக்கம்:நிழல் முகங்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சு. சமுத்திரம்

"ஆமாம்மா. இந்த இருபத்தஞ்சு வருஷத்துல. ஒன்னால அவரைப் புரிஞ்சிக்க முடியலன்னா, நீ பெண்ணாய் இருக்கவே லாயக்கு இல்ல. அப்புறம் பெண்டாட்டியாய் எப்படி இருக்க முடியும்? இவரைப் போய் இப்படிப் பேசுறவங்க வாய் அழுகாமல் போகாது." -

இந்தச் சமயத்தில் பழைய பட்டுச்சாமி, புதிய குதர்க்கத்தில் பேசினார். -

"என்னய்யா பேச்சு பேசுறிங்க. நம்ம குழந்தைகள் மேல தானே நமக்குப் பாசம் வருது..? தான் ஆடாட்டாலும், சதையாடும் என்கிற பழமொழி வந்ததே. இதனால தாய்யா. அந்தம்மா சொல்றதுலயும் நியாயம் இருக்கலாம். இருக்கலாமுன்னுதான் சொல்றேனே தவிர இருக்குன்னு சொல்லல."

கீழே உட்கார்ந்திருந்த சுந்தரம் திடீரென்று எழுந்தார். பட்டுச்சாமியின் முன்னால் போய் நின்றுகொண்டு கத்தினார்.

"என் கேள்விக்குப் பதில் சொல்லுய்யா. பூமி ஏய்யா கீழே விழாமல் இருக்குது..? அது ஆகர்ஷண சக்தின்னு சொல்லுவீங்க. ஆனால், அந்த சக்தி எப்படிய்யா ஏற்பட்டது? காத்து எப்படிய்யா அடிக்குது. அதைக் கண்ணால பார்க்க முடியுமாய்யா. அதுமாதிரி தான் இந்தப் பயல்கிட்டே நான் வச்சிருக்கிற பாசம். இது காரணகாரியத்திற்கு அப்பாற்பட்டதுய்யா."

பட்டுச்சாமி, பட்டும் படாமலும் பதிலளித்தார்.

"நீங்க சொல்றது ஒரு வகையில ஒரே ஒரு வகையில மட்டும் சரிதான். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானாய் வளருமுன்னு பழமொழி பேசுது."

"நான் அதை மாதிரி நினைத்து இவனுக்கு எதுவும் செய்யல. அப்படிப்பட்ட நெனப்பு வந்துட்டால். அது வியாபாரமாகிவிடும். சினிமாவுல பார்க்கிற நடிப்பாயிடும். ஏதோ எனக்குத் தோணுது. செய்யுறேன். இவனைப் பார்க்கும்போதும், பார்க்காதபோதும் என்னை அறியாமலே பாசம் வருது. அதை நான் உட்பட யாராலும் இழுத்துப் பிடிச்சு பிரேக் போட முடியாது."

"பார்த்தீங்களா. பார்த்தீங்களா. எப்படிப் பேசுரார்னு இன்னும் கூட அந்தப் பயல் தன்னோட மகன்னோ. இந்தப் பொம்பளை அவரோட வப்பாட்டின்னு சொல்ல மாட்டங்கார். உண்மையை மறைக்க முடியுமா. இவரு மவராசனா இவள்ோடயே வாழட்டும். என் குடும்பத்துக்கு நீங்கெல்லாம் சேர்ந்து."

அவள் பேசி முடிக்கும் முன்பே சுந்தரம் வீராவேசமாய் பேசினார்.