பக்கம்:நிழல் முகங்கள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சு. சமுத்திரம்

அந்தக் குழந்தை தனது பொறுப்பிற்கு வந்திருக்கிறது என்ற எண்ணத்தில், ரயில்பயல் பெருமிதப் பட்டான். ஆகாயத்திற்கும் பூமியுமாய் உயர்ந்து விட்டவன்போல் தன்னையே பார்த்துக் கொண்டான். குழந்தையைத் துரக்கப் போனான். கற்பனை வேறு. யதார்த்தம் வேறு என்பதைக் கண்டு கொண்டான். குழந்தையை அவனது பூஞ்சைக் கரங்களால் தூக்க முடியவில்லை. அந்த முயற்சியில் குழந்தை கீழே விழுந்துவிடப் படாதே என்ற பயம் வேறு. -

எப்படியோ, எண்ணமோ சக்தி என்பதை நிரூபிப்பவன் போல் அந்தக் குழந்தையைக் கீழே உட்கார்ந்து தன் இடுப்பில் வைத்தான். பிறகு குழந்தையோடு தவழ்ந்து, தவழ்ந்து, பாலத்தின் இரும்புக் கிராதி தூணருகே வந்து, அந்தத் தூணை ஆதாரமாகப் பற்றியபடி இடுப்போடும், குழந்தையோடும் எழுந்துவிட்டான். எழுந்தே விட்டான். அதற்குள் அந்தக் குழந்தை, அழுத களைப்பாலோ அல்லது அழவேண்டிய அவசியமில்லை என்று நினைப்பது மாதிரியோ, அவன் தோளில் முகத்தைப் புதைத்தது. ஒரு கையால், அவன் கழுத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டது. அவன், அந்தக் குழந்தையுடன் நடக்க முடியாமல் நடந்தான். ஒவ்வொரு அடிக்கும், அந்தக் குழந்தையை ஒவ்வொரு தடவை பார்த்துக் கொண்டான். துக்க முடியாத சுமை. முதல் தடவையாகக் கர்ப்பம் தரித்த நிறைமாத கர்ப்பிணிக்கு ஏற்படுவது மாதிரியான சுமை. பிரசவச் சுமை. பிராண வலி ஏற்படுத்துகின்ற சுமை. இந்த அத்தனை சுமைகளையும் சுமக்கும் ஒரு தாய்மைச் சுமை. சுகமாக சுமை.

ரயில்பயல், சுகச் சுமையோடு நடந்தான். தந்தையின் தோரணையோடு நடந்தான். தாயுமாகி நடந்தான். திடீரென்று, அவன் மனதினுள்ளே ஒரு வெளிச்சம். இவன் நிசமாவே என் தம்பியாக இருக்கலாமோ. இதனால்தான் ரத்த உரிமையில் என்னிடம் இப்படி ஒட்டிக் கொள்கிறதோ. இருக்காது. இவன் ரோசாப்பூ நானோ காக்காப்பூ ஏன் இருக்காது. அந்த ஒடுகாலி. என்னை ஒரு கருப்பனுக்கும், இவனை ஒரு சிவப்பனுக்கும் பெத்து இருக்கலாமே. சீச்சி. இவன் யாரோ. நான் யாரோ. இருக்கட்டும். ஆனாலும் அனாதைகள் என்ற முறையில் நாங்கள் ஒரு வர்க்கம். திக்கற்றவர்கள் என்ற முறையில் அண்ணன் தம்பிகள்:

அந்தப் பயல், என்னதான் மனதுக்கு மறுதலித்துப் பேசினாலும், அவனையறியாமல் அந்தக் குழந்தை தனது சொந்தத் தம்பி என்பது மாதிரியான ஒரு எண்ணம் ஏற்பட்டது. அவள் இருவருக்கும் தாய் என்பது போன்ற பிரமை. அவன் இஷ்டத்திற்கு விநோதமாக இந்த எண்ணத்தின் நிர்ப்பந்தத்தில் இருந்து, அவனால் விடுபட முடியவில்லை. கடவுளே. கடவுளே. என்னையும் என் தம்பியையும்