பக்கம்:நிழல் முகங்கள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 சு. சமுத்திரம்

வாங்கிக் கொடுத்த முள்முள்ளாய் குத்தும் ஸ்வெட்டர் துணி. அவன் குளிரைக் கட்டுப்படுத்தும் வகையில், அந்தோணி அவனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் - கோழி தன் இறக்கைக்குள் குஞ்சை அடைத்துக் கொள்வது மாதிரி. நான்கைந்து வடநாட்டுக்காரர்களும், கறுப்புத் தமிழர்களிடம் பேசவிரும்பாத, சிவப்புத் தமிழர்களும், அந்த பெட்டியை அடைத்திருந்தார்கள்.

அந்த ரயில் ஒடியபோது, உள்ளே வந்த அதே அந்த படபடத்தான் சோமையாவும், படபடக்காத தொழிலாளி கிருஷ்ணனும் உள்ளே ஓடிவந்தார்கள். டேய் கிருஷ்ணா, ரயில் மெள்ளத்தான் நகர்துடா. கீழே இறங்கி பெரிய ஸ்பேனர் கேபின் பெஞ்சில இருக்குதான்னு பார்த்துட்டு, எடுத்துட்டு வாடா..." என்றான்.

கிருஷ்ணனோ, சாவகாசமாக உட்கார்ந்தபடியே, "எப்படி ஸார் முடியும். பேசிட்டு யோசிக்காதே. யோசிச்சிட்டு பேசு" என்றான். உடனே படபடத்தான். பரபரத்தான்.

"ஏண்டா முடியாது.? ஒரே ஜம்புல, கீழே போறே. கேபின்ல இருக்குதான்னு பார்க்குறே. அப்புறம் ரயிலுல கடைசிப் பெட்டியில ஏறி இங்கே வந்து சேருறே. மனசிருந்தா மார்க்கம் உண்டு."

"நீ சொல்ற மார்க்கம் சொர்க்கத்துக்கு ரயிலுக்கு இல்லே."

"நீ செய்யுற வேலை லட்சணத்துக்கு. ஒனக்கு சொர்க்கம் கிடைக்காதுடா. நரகந்தான். அதுவும் ஏழு நரகத்திலேயும் கீழான நரகம் கிடைக்குண்டா..."

"அப்போகூட சந்தோஷமாாய் இருப்பேன் ஸார். ஏன்னா. ஒன்கிட்டே வேலை பார்த்து பழகிட்டேன் பாரு"

எல்லோரும் சிரித்து விட்டார்கள். பெரும்பாலோர் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சிலர் விழாமலே சிரித்தார்கள். ஆனால், ரயில் பயலோ - படபடத்தானை பார்த்தவுடனேயே சிரிக்கும் அந்தப் பயல், வெறித்த பார்வையோடு வேதனையோடு காணப்பட்டான். முட்டிக்கால்களை, பெஞ்சில் தூக்கி வைத்து, கைகளை அவற்றில் பின்னி அந்தோணியின் தோளிலே சாய்த்திருந்தான். ரயில் ஆடி ஆடி, இவனை அங்குமிங்குமாக ஆட்டியது. அவன் நிலையைப் புரிந்து கொண்ட அந்தோணி, அவன் கால்களை மடக்கி, தன் கரங்களால் அணை போட்டபடி ஆறுதல் சொன்னான்.

"ஏண்டா கலங்குறே? அந்தக் குழந்தைதான் சொந்தத் தாயோடு, பேராசிரியர் வீட்ல இருக்குதே. ஒன்னைவிட நல்லாத்தான் வளரப்போகுது. இப்போ வந்தது மாதிரி எப்பவும் என்னோட