பக்கம்:நிழல் முகங்கள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 1& 3

"சரி. எங்க பின்னால நட ஆறு மாதத்துக்கும் ஆறு வருடம் ஜெயில் வாங்கிக் கொடுக்கோம்"

தமிழ்ச்செல்வியை, வந்தவர்கள் எல்லோரும் சூழ்ந்து கொண்டார்கள். கையில் விலங்கு மாட்டாததுதான் மிச்சம். எல்லா தொழிலாளர்களும் கைகளைப் பிசைந்தபோது, அண்ணாமலை அந்த அதிகாரியிடம் மன்றாடினான்.

"எங்க சிஸ்டர் சார். இது. தயவு செய்து விட்டுடுங்க ஸார். வேற எந்த கம்பார்ட்மெண்ட்லயும் ஏறமாட்டாங்க ஸார். மாதம் ஒரு தடவை, இல்லன்னா ரெண்டு தடவை மட்டும்தான் வருவாங்க ஸார். எங்களில் ஒருத்தி சார் ஒங்களுக்கு காபி, தோசை, சீக்கிரமாய் கிடைக்குதுன்னா இதுதான் ஸார் காரணம்."

தலைமைப் பரிசோதகர் அதட்டினார்.

"இப்போதான் புரியுது. இந்தப் பொம்பிளேகிட்டே எவ்வளவுடா கமிஷன் வாங்கினிங்க..? இப்போதான் தெரியுது. அடுத்த தடவை இப்படிப் பார்த்தேன். உங்களையும் புக் பண்ணிடுவேன். ஆனால் இன்றைக்கு இந்த பொண்ணை விடுகிறதாய் இல்ல. நடம்மா."

தமிழ்ச்செல்வி, அவர்களுக்கு நடுவே நடந்தாள். பெட்டியோடு பெட்டியாக ஒட்டிக் கிடந்த ரயில் பயல், அவர்கள் பின்னால் நழுவி நழுவி நடந்தான். அம்மாவை ஜெயிலுல போட்டுடுவாங்களோ என்று பதறியபடியே ஒடினான்.

தமிழ்ச்செல்வி, ஏதோ ஒரு பெட்டிக்குக் கொண்டு போகப்பட்டாள். அங்கே ஏற்கெனவே சில பெண்களும், சிறுவர் சிறுமிகளும் நிறுத்தப் பட்டிருந்தார்கள். டிக்கெட் பரிசோதகர்கள் அவர்கள் நிறுத்தப்பட்ட இடத்திற்கு, அருகே இருந்த பெண்கள் பகுதி பிரிவுக்குள் போனார்கள். பெண் பயணிகள் யாரும் இல்லை போலீஸ்காரர்களை காவலுக்கு நிறுத்திவிட்டு உள்ளே போய் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டார்கள். பலராமனும், நவாப்ஜானும், நாராயணனும், ரயில் பயலோடு அங்கே வந்தார்கள். இதற்குள் சமையல் வளாகத்தில் இருந்து அண்ணாமலை உட்பட ஏழெட்டு பேர் கூடிவிட்டார்கள்.

உள்ளே சாப்பாட்டுச் சத்தம் கேட்டது. கண்ணாடிச் சத்தம் கேட்டது. சிரிப்புச் சத்தம் கேட்டது. பலராமன் வகையறாக்கள் பொறுமையோடு காத்திருந்தார்கள். கால்மணி ஆயிற்று. அரைமணி ஆயிற்று. கதவு திறக்கப்படவில்லை. நவாப்ஜான் பொறுமையிழந்து கதவைத் தட்டினான். லேசாய் தட்டினான். பலமாய் தட்டினான்.