பக்கம்:நிழல் முகங்கள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 185

"அப்படின்னா. நீங்க உள்ளே இருந்து விஸ்கி குடித்ததோ. இந்த லஸ்கர் பயல் குடித்ததோ, நாங்க குடிக்கப் போறதோ. குற்றம்தான். இந்த சிஸ்டர் டிக்கெட் எடுக்காமல் வந்தது எவ்வளவு தப்போ, அவ்வளவு தப்பு. நாங்க விடப் போறதில்லை."

"என்னய்யா செய்வே.?”

"சங்கிலியைப் பிடித்திழுத்து ஒடுற ரயிலை நிறுத்துவோம். ரயில்வே கார்டையும் பயணிகளையும் கூட்டி, நியாயம் கேட்போம். எல்லா விஷயத்தையும் சொல்லுவோம். நீங்க ரசீது கொடுக்காமலே காசு வாங்குறது. நாங்களும் எங்களோட இடங்களை பிறத்தியாருக்கு விற்கது, நீங்க காசு வாங்கிட்டு அனுப்புற ஆளுக்கு இடம் கொடுக்கிறது, எல்லாம் சொல்லுவோம். எல்லாத்துக்கும் மேல் விஸ்கி."

"யோவ். அளவுக்கு மீறிப் பேசுறே?"

"பின்ன என்ன ஸார்.இந்த சிஸ்டரைப் பற்றி கேட்டுப் பாருங்க. நாங்க யாருக்காவது இப்படி வக்காலத்தா வந்திருக்கோமா..? இந்தப் பொண்ணை போலீஸ் மத்தியில் வைக்கிறது எங்களை வைக்கிறது மாதிரி.”

"இப்போ என்னய்யா செய்யனும் என்கிறே.?" "எங்க சிஸ்டரை விடச் சொல்றேன்."

"சரி விட்டாச்சு. கூட்டிப்போ. இதுக்கு ஏம்பா பெரிய பெரிய வார்த்தைகளை விடுறே. நீ யாரு.? நான் யாரு..?

"ரொம்ப நன்றி ஸார். டேய் பசங்களா. இனிமேல் இந்த லஸ்கர் பயலுக்கு யாரும் ஒசிக் காபியோ ஒசிப் போண்டாவோ கொடுக்கப் படாது. அப்படிக் கொடுத்தால் செருப்படி கிடைக்கும்."

தமிழ்ச்செல்வி, ரயில்வே தொழிலாளர்கள் புடைசூழ நடந்தாள். அவர்கள் காட்டிய அன்பில், அவளுக்கு தலைவியைப் போன்ற கம்பீரமும், நன்றிக் கடன்பட்ட தோழியைப் போன்ற பணிவும் தோன்றின. நவாப்ஜான், "டேய் பலராமா. இன்னிக்கு. குடிச்சுட்டு. தப்பு செய்ததால் சிஸ்டரை விட்டுட்டாங்க. அடுத்த தடவை குடிக்காமல் வந்து பிடிப்பாங்க, பாரு..." என்று முணுமுணுத்தான்.

தமிழ்ச்செல்வி இருக்கையில் அமர்ந்ததும், சமையல் தொழிலாளர்கள் போய்விட்டார்கள். நவாப்ஜான், நூறு ரூபாய் நோட்டை எடுத்து, இலங்கை இளைஞனிடம் நீட்டினான். "ஓங்க ரூபாய்க்கு வேலையில்லை. அபராதம் கட்டாமலே தங்கச்சியை மீட்டிட்டோம்." என்றான். இலங்கை இளைஞன், படபடப்பாய் பேசினான்.