பக்கம்:நிழல் முகங்கள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 சு. சமுத்திரம்

சொல்லுங்க. அவங்க சொல்கிற யோசனைகளை செயல்படுத்த முடியாட்டாலும், யோசித்துப் பாருங்க. எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. எந்த நிலையிலும் ஒரு வாழ்க்கை உண்டு. உங்களுக்காவது கூடப் பிறந்த தம்பி இருக்கான். எனக்கு யாருமே இல்லை. உங்களை மாதிரி அனாதைதான். ஆனாலும், இப்படி அனாதையானதுக்காக சில சமயம் சந்தோஷங்கூட வருது. காரணம், மானுடத்தை உறவுகளுக்குள் தேடி ஒய்ந்துபோன நான், இப்போ இந்த ரயில்வே சோதரர்களிடம் காணுறேன். தோழமையில், என் வாழ்க்கைக்கும் ஒரு பதில் கிடைத்தது. உங்களுக்கும் இதைத்தான் சொல்றேன். கெளரவத்துக்கு இதயத்தை அடிமையாக்கப்படாது. உள்ளுக்குள்ளேயே புழுங்குகிற இதயத்துக்கு, வெளியில் இருந்து தோழமை என்கிற காற்று வீசாவிட்டால், அது அழுகிடும். என்ன சொல்றீங்க கமலாகாரன்.? சரி இப்போது, துக்கத்தை தூக்கதில் கலையுங்க காலையில் பேசிக் கொள்ளல்ாம்."

கமலாகரன், அவளை நிமிர்ந்து பார்த்தான். அந்த முகம் காட்டிய தாய்மைக் கனிவில், அவன் குழந்தையாகி, அழக்கூடப் போனான். பிறகு, அவளும் ஒரு அனாதை என்ற உணர்வில், அவளை அனுதாபத்துடன் பார்த்தான். ஐந்தாண்டு காலமாக, நாயினும் கீழாய்ப்போன வாழ்க்கையை அப்போதே உதறிப் போட்டதுபோல் சிரித்தான். ஆண்டுக்கணக்கில் மாண்டு கிடந்த சிரிப்பு உயிர்த்தெழுந்தது. செதுக்கி வைத்த அரிசிபோல, பற்கள் பிரகாசித்தன. அந்தச் சிரிப்பு, தமிழ்ச்செல்வியையும் தொற்றிக் கொண்டது. அவனைவிட்டுத் திரும்பியபடியே, "நான் வாறேன். காலையில் பேசிக்கலாம்" என்று கூறியபடியே நடக்கப் போனாள். அவன் குரல், அவளைத் தடுத்தது.

"எத்தனையோ பேர் கேட்டபோதும், மெளனமாகிப் போன எனக்கு, இப்போது உங்ககிட்ட சொல்லாவிட்டால் தலை வெடித்துடும்.”

"சொல்லுங்க தோழரே."

கமலாகரன், அவளை பார்த்து பிரமித்தான். அவளின் மெல்லிய சிரிப்பில் உருகிப்போனான். தோழரே, எவ்வளவு பெரிய சொல். உறவுக்குள் அடைபடாத சொல். அதேசமயம் உறவாடலின் உச்சச்சொல். சாதிகளைத் தாண்டிய சொல். கம்பனும், கார்ல் மார்க்ஸும் கண்டெடுத்த சொல். இந்தச் சொல்லுக்கு மட்டும் அனைத்து மனிதர்களும் உயிரளித்தால் உலகில் சண்டையில்லை. இனபேதம் இல்லை. "நான் நீ." என்ற சொல்லும் இல்லை. அவன், அவளைத் தோழியாகப் பார்த்தான். ஒப்புக்குக் கேட்காமல், உறுதுணையாய் கேட்கும் அவள் முகபாவம் அவனை நெஞ்சுருக