பக்கம்:நிழல் முகங்கள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 191

"இப்படியெல்லாம் சிறைப்பட்டு, வதைபட்டு, உதைபட்டு வருந்திய எங்களை அடிப்பதைக் குறைத்தார்கள். நாங்கள் இதற்கு பழக்கதோசமே காரணம் என்று நினைத்தபோது, இந்தியாவுடன் ஏற்பட்ட உடன்பாட்டால் நாங்கள் சித்ரவதை செய்யப்படவில்லை என்பதை உணர்ந்தேன். கிரிமினல் கைதி நிலையில் இருந்து, அரசியல் கைதியாக பதவியுயர்வு கிடைத்தது. பிறகு ஓராண்டுக்கு முன்பு, விடுவிக்கப்பட்ட போராளிகளில் நானும் ஒருவன். பூசா முகாமிலிருந்து இந்தியக் கப்பல் மூலம் காங்கேசன் துறைக்கு வந்தோம். அங்கிருந்து இந்திய விமானங்கள் விடுதலைக் கைதிகளை மட்டக்களப்பு, திரிகோணமலை முதலிய இடங்களுக்கு கொண்டு சென்று தத்தம் வீடுகளில் சேர்த்தன. நானும் ஒருசில போராளிகளும் ஹெலிகாப்டரில் சாவகச்சேரிக்கு வந்தோம்."

"சாவகச்சேரியைப் பார்த்து பதைத்துப் போனேன். என் வீட்டைப் பார்த்து சிதைந்து போனேன். சாவகச்சேரி மருத்துவமனை, குண்டடி பட்ட அடையாளத்துடன் தோன்றியது. இதைவிடக் கொடுமை, இலவசமாக அரிசி வாங்க நின்ற தமிழர்கள்மீது, போராளிகள் குண்டுவீசிக் கொன்றனர். இதில் என் மாமா மகன் மரித்துப் போனான். வீட்டுக்குப் போனேன். நான் பூசா முகாமிற்குப் போன மறுமாதமே அம்மா மரணமுகாமிற்குப் போய்விட்டாள். அம்மா என்று அழப்போனேன். அதற்குள், எல்.டி.டி. யினருக்கும் இந்தியப் படைக்கும் இடையே நடந்த துப்பாக்கிப் போரில் என் தந்தை இடைச் செறுகலாகி, யாழ் மருத்துவ மனை யி ல் , வாழ் வின் விளிம்பி ல் ஊச லா டி க் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அப்பா என்று கதறப் போனேன். அதற்குள் அங்கே கிடக்கிறானே அந்தப் பொடியன், "அண்ணா" என்று சொன்னபடியே மொட்டைக் கையோடு வந்து நின்றான். நான் யாருக்காக அழுவது? எல்லோருக்குமாய் அழுதேன்

"வீட்டுக்குள் நுழையாமலே, தம்பியோடு யாழ் நகருக்குள் பாய்ந்தேன். என்னைச் சந்தேகமாகப் பார்த்த இந்திய ராணுவத்திடம் என் அடையாளக் கார்டைக் காட்டி, மருத்துவமனைக்குள் போனேன். எப்பவோ மனதால் செத்த, என் தந்தை உடம்பாலும் சாகும் நிலையில் இருந்தார். துண்டிக்கப்பட்ட காலோடு துடித்தார். தண்டித்த விதியோடு போராடி சரிந்து சொரணையற்றுக் கிடந்தார். என் தந்தை எனக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்துவிட்டார் தெரியுமா தமிழ்ச்செல்வி? அவருக்கு சோறெடுத்துப் போக வேண்டாம் வயிறே இல்லாமல் போனது. எப்படி இருக்குது அப்பா என்று கேட்க வேண்டியதில்லை. காதிழந்து போனார். என்னைப் பார்த்து வேதனைப்பட வேண்டியதில்லை. உணர்விழந்து போனார்."