பக்கம்:நிழல் முகங்கள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 சு. சமுத்திரம்

"நான், தம்பியோடு வீட்டுக்குப் போனேன். இரண்டு நாட்களில் யாழ்நகர ராணுவத் தளபதியிடம் இருந்து அழைப்பு வந்தது. என் மறுவாழ்விற்கு இருபத்தையாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தது. என்னைப் போல் விடுதலையான கைதிகளை மறுவாழ்வில் ஈடுபடுத்த நடைபெறும் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

நான், சட்டையை மாற்றாமலே புறப்பட்டேன். சாவகச்சேரியின் பிரதான சாலையை தாண்டி, காட்டுப் பகுதி போன்ற பகுதியில், நடந்தபோது, போராளிகள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். "ஏய், ஐந்தாம்படை” என்று அதட்டினார்கள்."

22 30 يلي

அந்த ரயில் குலுங்கிக் குலுங்கி ஓடி தமிழ்ச்செல்வியையும், கமலாகரனையும் குலுக்கிக் குலுக்கி சேர்த்து வைத்தது.

தமிழ்ச்செல்வி, ரயிலாட்டத்தில் அவன் தோள்மேல் விழுந்தாள். உடனே, உடனடியாக தலையைத்துக்கி, பெட்டியின் எதிர்திசையில் சாத்தி, அவனையே பார்த்தாள். அந்தகார இருளில் வெளிச்சம் பீறிட்டது. காட்டு மரங்களைப் பற்றிய தீயில், சட்டென மலைகளும், மரங்களும் மரித்தெழுந்தன. அந்த ஒளிச் சிதறலில் கமலாகரன், தமிழ்ச்செல்வியின் கண் கடல்கள் நீர் நீராய் அலை அடித்து, விழிக்கரையை உடைத்து, கன்னப் பூமியில் அத்துமீறி, பாய்ந்து ஒடுவதைக் கண்டான். பேச்சை நிறுத்திவிட்டு, அவளையே பார்த்தான். அவளோ பேசினால் அழுகை வரும் என்பதுபோல், மேற்கொண்டு பேசும்படி கீழே தொங்கிய வலது கையை தூக்கி, உள்ளங்கை தெரிய மேலே மேலே கொண்டு போனாள். கமலாகரன் தொடர்ந்தான்.

"நான் ஒன்றும் புரியாமல் விழித்தேன். என்னைச் சூழ்ந்தவர்கள் எங்கிருந்தோ குதித்த போராளிகள் அல்ல. என் ஊனோடு உயிராக இருந்தவர்கள். என்னுடன் ஒன்றுபட்டு நின்றவர்கள். ஒரே இலையில் சாப்பிட்டவர்கள். என் வீட்டில் உறங்கியவர்கள். இப்போதோ என்னை அந்நியப்பட்டுப் பார்த்தார்கள். நான் ஏதும் புரியாமல் விழித்தபோது, அதை அவர்கள் நடிப்பென்று நம்பி, வெப்பமாகப் பேசினார்கள்.