பக்கம்:நிழல் முகங்கள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 193

"நீ இங்கே வந்து மூன்று நாள் ஆகுது. அப்படியும் எங்கள் இருப்பிடம் தெரிந்தும் நீ வரவில்லை."

"நீங்கதானே என்னை வந்து பார்க்கணும்."

"இதுக்கு மேலே பேசினால் அப்புறம் பேசுவதற்கு வாய் இருக்காது. நாம் நடத்துவது ஒரு ஜீவ மரண போராட்டம். இதில் எந்தவித சமாதானத்திற்கும் இடமில்லை. இப்போது உறவின் உரிமை முக்கியமில்லை. கடமைதான் முக்கியம். லட்சியம்தான் சிந்தனை. நீ, எங்களை வந்து பார்க்காததற்கு, உன்னைப் பார்க்க முடியாத இடத்திற்கு அனுப்பி இருப்போம். ஆனாலும், மனம் கேட்கவில்லை. வெளிநாட்டு இந்தியப் படைக்கு நீ விலை போக மாட்டாய் என்று நம்பாமல் இருக்க முடியவில்லை. சரி. வெட்டிப் பேச்சுக்கு இப்போது நேரமில்லை. நீ நாங்கள் சொல்வதில் இரண்டில் ஒன்றைச் செய்யவேண்டும். ஒன்று இந்தியப் படையினரின் நண்பன்போல் நடித்து, எங்களுக்கு தகவல் தரவேண்டும். அல்லது காட்டுக்குள் வாழும் போராளிகளிடம் போக வேண்டும். இது வேண்டுகோள் அல்ல. ஆணை."

"எனக்கு கொஞ்சம் யோசிக்க அவகாசம் கொடுங்க"

"யோசித்து யோசித்தே எண்ணமில்லாமல் போய்விட்டோம். நீ இரண்டில் ஒன்றைச் செய்யவில்லையானால், நாங்கள் ஒன்றே ஒன்றைச் செய்ய வேண்டியது வரும். அதாவது உன்னை கம்பத்தில் கட்டி சுட வேண்டியது இருக்கும்.”

"நானும் ஒரு போராளி என்ற முறையில் சூடாகப் பேசப் போனேன். அதற்குள் அந்தக் காட்டுப் பகுதியில் ஆங்காங்கே பதுங்கியபடியே துப்பாக்கி பிடித்த இந்திய சிப்பாய்களில் ஒருவன் சந்தேகமாய் பார்த்தபடியே அந்தப் பக்கம் வந்தான். என்னைச் சுற்றி நின்றவர்கள், எனது நண்பர்கள்போல் தோளிலே கை போட்டார்கள். சிரித்துப் பேசுவதுபோல் தலையாட்டினார்கள் நான் அந்த சுதேசி நடிப்பிலும், அது உண்மையாக இருக்கும் என்பதுபோல் மெய்மறந்தேன். திரைப்படங்கள் கற்பனை என்று தெரிந்தாலும் நாம் சிரித்துவிடுகிறோமே, அழுதுவிடுகிறோமே அப்படி அந்த சிப்பாய் இன்னொரு சிப்பாயை வலுக்கட்டாயமாக, தன்னுடன் வரவழைத்தபடி, எங்களை நோக்கி வந்தபோது, என் பழைய நண்பர்கள் என்னை புதிய விரோதிபோல் பார்த்தபடியே, "அந்தக் காடையர்களிடம் எங்களைப் பற்றி ஏதாவது சொன்னால், உன் தம்பியின் இன்னொரு கையும் போயிடும்" என்று சொல்லி விட்டு, தற்செயலாக நடப்பதுபோல் நடந்தார்கள்."