பக்கம்:நிழல் முகங்கள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 209

அந்தோணி, தன் முட்டாள்தனத்துக்கு நொந்து கொள்வது போல், தலையில் கை வைத்தான். அழுகையை நிறுத்தி கண்ணிரைத் துடைத்துவிட்டு, சோமையா சொல்வதை உற்றுக்கேட்ட அந்தப் பயல் மனதில் ஒரு நம்பிக்கை. அப்பாவை அவன் பார்த்து விட்டால் பிழைத்துக்கொள்வாராம். அப்பாவைப் பார்க்கணும். இப்பவே போய் பார்க்கணும்.

அவன் இந்த மூவரையும் முகபார்வையாய் பார்த்துவிட்டு, குடைக்குமிழி மாதிரி தொங்கிக் கொண்டிருந்த இரும்புப் பிடி பிரேக்கை இழுக்கும்படி சைகை செய்தான். அவர்கள் மெளனமாக அவனைப் பார்த்தபோது, அவன் இருக்கையில் ஏறி நின்று அதை இழுக்கப் போனான். அந்தோணி தழுதழுத்த குரலில், "மூணு நாளைக்கு பொறுத்துக்கோடா” என்று சொன்னபடியே அவனைப் பிடித்துக் கொண்டான்.

அந்தச் சிறுவன் பொறுக்கத் தயாராக இல்லை. அந்த ஒடும் ரயிலில் மேலும் கீழுமாகப் பார்த்தான். பள்ளிக்கூடத்தில், மொருக்குகளை கயிற்றில் கட்டி பிள்ளைகளின் தலைகளுக்குமேல் கொண்டுபோய் அவர்களை குதிக்க விடுவார்களே, அப்படி அவன் குதித்தான். அந்த பிரேக் பிடியை பிடிப்பதற்காக கைகளை துக்கியபடியே பிடித்தான். "அபா. அபா." என்று கூறியபடியே குதித்தான்.

அந்த கம்பார்ட்மெண்ட் பயணிகள் அனைவரும் அங்கே கூடி விட்டார்கள். அந்த மூவரிடமும் கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டார்கள். உடனே ஒரு சர்வர் வாலிபர் அந்தச் சிறுவனை இழுத்துக் கொண்டு சமையல் கட்டுப் பக்கம் போனான். அவனைப் பார்த்துவிட்டு "வாடா என் கரிச்சான் குஞ்சே என்று பேசப்போன அண்ணாமலை, வாயகல நின்றான். சமையல்கார குப்புசாமி, ஒரு சில சர்வர்கள், அவனை வியப்போடு பார்த்தபோது, அந்தப் பையனை கூட்டி வந்த சர்வர், அங்கே நடந்த விவரத்தை உணர்ச்சியோடு கூறினான். ஒருவரைப் பற்றிய எண்ணத்தை ஏதாவது ஒருவகையில் ஏற்படுத்தும்போதுதான், அவரைப் பற்றிய நல்லது கெட்டது நினைவுக்கு வரும். இப்போது இந்தச் சிறுவன் சுந்தரத்தைப் பற்றிய நினைப்பை ஏற்படுத்திவிட்டதால், எல்லோரும் சுந்தரத்தை நினைத்துக் கண் கலங்கினார்கள். அவர்கள் மெளனிக ளானதை அனுமானித்து அப்பாவிற்கு மரணம் ஏற்படும் என்று அஞ்சிய அந்தச் சிறுவன், முன்னிலும் அதிகமாக அழுதான். பலமாக தலையில் அடித்துக் கொண்டான். பிரேக் பிடியைப் பார்த்து குதித்தான்.