பக்கம்:நிழல் முகங்கள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 211

வந்தன. எல்லோரும் தன்னை ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது.

உடனே, அவன் தாவிப் பாய்ந்தான். குழாயடிக்கு ஓடினான். கதவை மூடிக்கொண்டான். பிறகு, "டங். டங்" என்று சத்தம் கேட்டது. "அப். அப்." என்று அலறல் கேட்டது.

அந்த ரயில், அப்போது அந்தக் காட்டுப் பாதையில், பஞ்சாப் பிரச்சினையாலும், பஞ்சப் பிரச்சினையாலும், தீவிரவாதிகள், தன்னைக் கவிழ்க்கலாம் என்ற அனுமானத்துடன், நின்று நின்று நகர்ந்தது.

கேந்திரமான அந்தப் பகுதியில், ரயில்வ்ே போலீஸார் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள். ரயில் பாதையில் நடந்தபடி, தண்ட வாளங்களை உற்றுப் பார்த்தபடியே இயங்கினார்கள். பாதி இவர்களின் பாதுகாப்பிற்காகவும், பாதி பயத்தோடும் அந்த ரயில் கிட்டத்தட்ட நடந்தது.

குழாயடி அறையை, பூட்டிக்கொண்ட பயலைப் பார்த்ததும், ரயில்வே தொழிலாளர்கள் கதவைத் தட்டினார்கள். அந்தப் பயலோ, அங்கே குவித்து கிடந்த தட்டுக்களையும், டம்ளர்களையும் காலால் உதைத்தான். பிறகு, ஒவ்வொரு டம்ளராக, ஜன்னல் கம்பிகளின் இடைவாய் வழியாக, ரயிலுக்கு வெளியே வீசி வீசிப் போட்டான். டம்ளர்கள் முடிந்ததும், தட்டுக்கள் விழுந்தன. ரயிலுக்கு வெளியே எகிறி எகிறி விழுந்தன. வெளியே கதவு பயங்கரமாகத் தட்டப் பட்டது. "டேய். சோமாறி. சோதா..." என்ற குரல்கள், கோஷ்டி கானமாயின. அப்போதும் பயல் அதரவில்லை. ஒரு டிரேயை எடுத்து வீசப்போனான். அது ஜன்னல் வாய்க்குள் போக மறுத்ததால், பிளாஸ்டிக் டம்ளர்களை எடுத்து வெளியே வீசினான். இப்போது வெளியே பயங்கரமான ஓசைகள். ஆனாலும், அவன் கதவைத் திறக்கவில்லை. வெளியே வீசுவதை நிறுத்தவில்லை. "அப். அப்." என்று அரற்றுவதை முடிக்கவில்லை.

திடீரென்று, ரயில் குலுங்கியபடியே, சிறிது தூரம் சிணுங்கிச் சென்றது. அப்புறம் வலுக்கட்டாயமாக நின்றது. உள்ளே நின்ற சிறுவனுக்கு, அண்ணாமலையின் பயங்கரப் பிளிறல் கேட்டது.