பக்கம்:நிழல் முகங்கள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 சு. சமுத்திரம் பாதாதிகேசம் வரை ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். ஒருவர் பிரசன்னத்தில், இன்னொருவர் சுகம் கண்டதுபோல் சிரித்தார்கள். "என்ன பொருத்தம் எங்கள் பொருத்தம் பாருங்கள்" என்பதுபோல் மற்றவர்களைப் பார்த்தார்கள். பிறகு, மீண்டும் ஒருவரை ஒருவர் விழி நீக்காது; இமை கொட்டாது; ஆடாது; அசையாது அப்படியே பார்த்தார்கள். அது ஆன்மாவின் பார்வை. சிலுவையில் இருந்து உயிர்த்தெழுந்த ஏசுவைப் போன்ற பார்வை. அன்பெனும் சிவம் உடல் பிணியையும், உயிர்ப்பிணியையும் ஒருசேர நீக்கவல்லது என்று பார்க்க வைக்கும் அருட்ஜோதி ராமலிங்கப் பார்வை. அன்பெனும் பிடியில் அகப்பட்ட பார்வை. சோதிக்காத பார்வை. சோதிமயமான பார்வை. இந்த அன்புப் பார்வைக்கு எதிராக, அணுகுண்டுந்தான் நிற்குமோ? எந்த நோயும் இந்தப் பார்வையில்தான் எரிந்து போகாதோ? எரிப்பவற்றையும் எரிக்கும் சக்தி, அன்புச் சக்திக்குத் தவிர, வேறு எந்த சக்திக்கு உண்டு?