பக்கம்:நிழல் முகங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் முகங்கள் 19

எப்படி எப்படில்லாம் தொழில் நுட்பம் இருக்குதுன்னு பேசினிங்கன்னா. அது படித்தவன் செய்யுற காரியம். இனி ஒரு தடவ அப்படிப் பாடிப்பாருங்க, ஒங்கவாயைக் கிழிக்கேனா இல்லியான்னு பார்த்துடலாம். பெண்கள் இருக்காங்க என்கிற நினைப்பில்லாமல் என்னடா. பாட்டு? ஏடாகோடமான பாட்டு.”

பக்கத்து பெட்டியில் கப்சிப். வாய் கிழிபடக்கூடாது என்பது போல் எல்லா மாணவர்களும் அதை மூடி வைத்தார்கள். ஊசி போட்டுத் தைத்தது மாதிரியான உதடு ஒட்டல்கள். நவாப் ஜான் பேசி முடித்த பெருமிதத்தில் உட்கார்ந்தபடியே சுற்றுப்பக்கமாய்க் கண்களைச் சுழலவிட்டான். உடனே, பயல், “ஏ. ஹோ" என்றபடி கைத்தட்டினான். உடனே எல்லோரும் கைத்தட்டினார்கள். அந்த வாலிபன் மட்டும் கை தட்டாமல் "நானே கத்தணுமுன்னு நினைச்சேன். நல்லவேளை, நீங்க தலையிட்டுப் பேசிட்டீங்க. இல்லாட்டி கொலையே நடந்திருக்குமாக்கும். நான் கூடத்தான் எம்.காம் படிச்சேன். இப்படியா பாடுறேன்?" என்று சொன்னபடியே அந்தப் பெண்களை ஒரங்கட்டிப் பார்த்தான். இந்தப் பெண்களில் ஒருத்தி, மற்றவர்களிடம் முணுமுணுத்தாள்.

"பாடுற வயசு, பாடிட்டுப் போறாங்க. பாவம். அவங்களை இப்படியா திட்டுறது.?”

அரும்பு மீசை வாலிபன் அவர்களின் பேச்சை நோட்டம் போட்டான். அதன் அர்த்தம் புரிந்ததும் அவனுக்கு எரிச்சல் வந்தது. இவன் இருக்கும்போது, இவள்களுக்கு அப்படி என்ன பாட்டு கேக்குது. அந்தப் பெண்களைப் பார்ப்பதைவிட அந்த அழுக்குப் பயலைப் பார்க்கலாம் என்பதுபோல், அவன் உற்றுப்பார்த்தான். அப்புறம் பலராமனிடம் ஒரு கேள்வியைக் கேட்டான்.

"இந்தப் பையன் யாருங்க? இவனோட அப்பாம்மா எங்கே இருக்காங்க?"

பலராமன் அந்தச் சிறுவனை, தட்டித் தட்டிக் கேட்டான். "டேய் ஒங்கப்பாம்மா எங்கேடா இருக்காங்க." அந்தச் சிறுவனோ, சூடுபட்ட பூனைபோல் திடுக்கிட்டான். மேலே அவனைப்போலவே, அந்தரத்தில் தொங்கிய மின்விசிறியைப் பார்த்தான். பெஞ்சில் வைத்த கால்களைக் கீழே போட்டான். கண்களைச் செருகியபடிய்ே வெளியே பார்த்தான்.

பலராமன், அந்தச் சிறுவனைத் தன் பக்கத்தில் இழுத்து வைத்துக் கொண்டான். பிறகு பொதுப்படையாக, கண் கலங்கிப் பேசினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/32&oldid=588222" இலிருந்து மீள்விக்கப்பட்டது