பக்கம்:நிழல் முகங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 க. சமுத்திரம்

அம்மாவின் இடுப்பில் இருந்த ஞாபகம். அவள் தோளில் சாய்ந்த நினைவு. அவளை யார் யாரெல்லாமோ திட்டியதைக் கேட்கவில்லையானாலும் பார்த்தது மாதிரி எண்ணம். கூடாரம் கூடாரமாய் குவிந்த இடத்தில். அநேகமாக இந்த பலராமன் "அப்" சொல்வது மாதிரி. சென்ட்ரல் நிலையத்தில் அம்மாவுடன் இருந்துதான் கூட்டத்திற்குள் அகப்பட்டது மாதிரித் தோற்றம். அம்மா. அந்தக் கூட்டத்திற்குள் தன்னைத் தள்ளிவிட்டது மாதிரி. தள்ளிவிட்டாளோ. கூட்டத்தின் தள்ளலில் தற்செயலாய்த் தள்ளப் பட்டேனோ..?

அந்தச் சிறுவன், இரண்டு கால்களையும் பெஞ்சில் தூக்கி வைத்து, முழங்கால்களில் முகம் புதைத்து, தலையை உருட்டினான். நினைவுகளைச் சிந்தனையில் சேர்த்தான்.

'அம்மா என்னை வேண்டுமென்று தள்ளியிருக்க மாட்டாள். கூட்ட நெரிசலில் நானே தள்ளப்பட்டிருப்பேன். இல்லை. வேண்டுமென்றே விட்டிருப்பாள். அப்படி விட்டிருந்தால் ஆறு வயக வரைக்கும் இடுப்பில் ஏன் எடுத்து வைக்கிறாள்? பிறந்தபோதே குப்பைத் தொட்டியில் போட்டிருப்பாளே. என் அம்மாவை நான் பார்ப்பேனா? ஒரு தடவையாவது பார்ப்பேனா. இப்போகட என்னால் அவளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். வட்ட முகம் முதுகை மூடிய முடி கறுப்புப் பொட்டு. ஒரு தெத்துப்பல். எதையோ ஊடுருவுவது மாதிரியான கண்கள். கறுப்புச் சேலை. வெள்ளை ஜாக்கெட்

'அம்மா. என் அம்மா. அவள் என் அம்மா... என்னைக் கூட்டத்தில் தள்ளிவிட்டுத் தன் போக்கில் போன தறுதலை. இல்லையானால் என்னைத் தேடிக் கண்டு பிடித்திருக்கலாமே. மணி 'அப்கிட்டே ஒரு வாரம் இருந்த என்னை மீட்டிருக்கலாமே. அவள் அம்மா இல்ல. இந்த ரயில் என்னை எப்படி உணர்ச்சி இல்லாமல் சுமக்கிறதோ, அப்படி என்னை உணர்ச்சியத்து சுமந்தபின் உயிரற்றவன் ம்ாதிரி ஆக்கியவள். அவள் நெனப்பே கூடாது. எனக்கு எல்லாமே இந்த அப்பாக்கள்தான். நான் முருகன் மாதிரி. பெண் வயிற்றில் பிறக்காத ஆண்பிள்ளை. இந்த பல்ராம் அப்பா எதுக்காக என்னைப் பற்றிச் சொல்லனும்? சொல்லாதிங்கப்பா.

அந்தச் சிறுவன், திடீரென்று எழுந்தான். பலராமனுக்கு முதுகைக் காட்டி அரும்புமீசை சீனிவாசனைக் கோபமாய்ப் பார்த்தபடி நின்றான். பிறகு, மறுபக்கமாய்த் திரும்பி, பலராமனைப் பார்த்தான் உடனே அப்படியே அவன் மேல் விழுந்து, அவன் கழுத்தில் தன் பிஞ்சுக் கரங்களைப் படர விட்டபடியே "அப் அப்.: என்று அரற்றினான். அப்புறமாய் அழுதான்; அதற்குப் பிறகு "அப். அப்." என்று வீறிட்டான். יx

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/37&oldid=588235" இலிருந்து மீள்விக்கப்பட்டது